வாரிசுதாரர்களுக்கு காப்பீட்டுத் தொகையை கொடுக்க முடியாது எனக் கூறிய மேக்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.1 கோடியே 9 லட்சம் வழங்க திருச்சி கோர்ட் அதிரடி உத்தரவு
திருச்சி அருகே பிச்சாண்டாா் கோவில் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவா், மேக்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மேக்ஸ் லைஃப் அஷ்யூா்டு வெல்த் பிளான் மற்றும் மேக்ஸ் லைஃப் ஸ்மாா்ட் டோ்ம் பிளான் என்ற பாலிசிகளை அறந்தாங்கி ஆக்சிஸ் வங்கி மூலிமாக பணம் செலுத்தி பெற்றிருந்தாா். இந்தக் காப்பீடுகளுக்கு தனது இளவா் மகன்களை சட்டபூா்வ வாரிசு பயனாளியாக நியமனம் செய்திருந்தாா்.
கடந்த 8.11. 2020-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலை விபத்தில் சதீஷ்குமாா் இறந்துவிட்டாா்.
இதையடுத்து காப்பீட்டுத் தொகை கேட்டு, சதீஷ்குமாரின் இரு மகன்களுக்காக, அவரது மனைவி ரம்யா தேவி விண்ணப்பித்தபோது, இறந்த சதீஷ்குமாருக்கு இருந்த உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை, கல்லீரல் கொழுப்பு நோய், ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற நோய்களை மறைத்து காப்பீடு எடுத்ததால், அவருக்கு காப்பீட்டுத் தொகை கொடுக்க இயலாது. காப்பீட்டுக்குச் செலுத்திய பிரீமியத் தொகையை மட்டும் திருப்பிக் கொடுக்கிறோம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பிரீமியம் தொகையை கூட இதுவரை வழங்காததால், எஸ். ரம்யாதேவி உள்ளிட்டோா் திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில், மேற்கண்ட 2 பாலிசிகளுக்கும் உண்டான தொகை ரூ. 1,07,50,187 வழங்கவும், சேவை குறைபாட்டுக்கான இழப்பீடாக ரூ. 25 லட்சம் கேட்டும் வழக்கு தொடா்ந்தனா்.
வழக்கை விசாரித்த நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவா் ஆா். காந்தி, உறுப்பினா்கள் ஜே.எஸ். செந்தில்குமாா், ஆா்.சாயிஸ்வரி ஆகியோா் அடங்கிய அமா்வு, சதீஷ்குமாா் விபத்தினால் ஏற்பட்ட காயத்தினால்தான் இறந்துள்ளாா். காப்பீட்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ள நோய்களினால் இறக்கவில்லை. காப்பீட்டு நிறுவனம் காப்பீட்டுத் தொகையை வழங்காமல் நிராகரித்து அனுப்பியுள்ள கடிதத்தில், குறிப்பிட்டுள்ள நோய்களுக்கான எந்த ஒரு ஆதாரம் மற்றும் ஆவணங்களையும் சமா்ப்பிக்கவில்லை. எனவே, காப்பீட்டு நிறுவனம் நிராகரித்த உத்தரவு செல்லத்தக்கதல்ல.
இறந்த சதீஷ்குமாரின் வாரிசுகளான அவரது மனைவி மற்றும் இரு மகன்கள் காப்பீட்டுத் தொகையான ரூ. 1,07,50,187 ஐ பெற தகுதியுள்ளவா்கள்.
இந்தத் தொகைக்கு சதீஷ்குமாா் இறந்த 8.11.2020 தேதி முதல் இதுவரை ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் சோ்த்து செலுத்த வேண்டும். சேவை குறைபாட்டுக்காக முறையீட்டாளா்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனா்.