முதல் முறையாக ஹெலிகாப்டர் சேவையுடன் பாரத் கவுரவ் ரயிலில் ஆன்மீக சுற்றுலா. ஐ.ஆர்.சி.டி.சி., தென் மண்டல குழு பொதுமேலாளர் தகவல்.
இந்தியாவில் முதல் முறையாக
ஹெலிகாப்டர் சேவையுடன் பாரத் கவுரவ் ரயிலில் ஆன்மீக சுற்றுலா.
ஐ.ஆர்.சி.டி.சி., தென் மண்டல குழு பொதுமேலாளர் தகவல்.
கேதார்-பத்ரி-கார்த்திக் கோயில்களுக்கு செல்ல
திருச்சி
இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சியானது சுற்றுலாப் பயணிகளுக்கான பிரத்யேக பாரத் கவுரவ் சுற்றுலா ரயிலை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. கடந்த ஆண்டு மட்டும் 16 சுற்றுலா பயணங்களை இந்த ரயில் மேற்கொண்டு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்துள்ளது.
இதில், தங்கும் இடம், உணவு, உள்ளூர் பயணங்களையும் (அதாவது ரயில் செல்லும் முக்கிய ஊரிலிருந்து வேன், பேருந்து போன்ற வசதிகள்) ஐ.ஆர்.சி.டி.சி.,யே கவனித்துக் கொண்டது.
இந்நிலையில், நிகழாண்டு 20 சுற்றுலாப் பயணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள ஐ.ஆர்.சி.டி.சி., சுற்றுலாப் பயணத்திட்டத்தில் மேற்கண்ட வசதிகளுடன் இந்தியாவிலேயே முதல் முறையாக ஹெலிகாப்டர் பயண வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.சி., தென் மண்டல குழு பொதுமேலாளர் பி.ராஜலிங்கம்பாசு திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நிகழாண்டு பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் மூலம் 1 சுற்றுலாப் பயணம் முடிந்துவிட்டது.
உத்ரகாண்ட் மாநில அரசின் சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஐ.ஆர்.சி.டி.சி., 2வது சுற்றுலா பயணம் ஜூன் 20-ம் தேதி மதுரையிலிருந்து தொடங்க உள்ளது. ‘கேதார் – பத்ரி – கார்த்திக் (முருகன்) கோயில் யாத்திரை’ என்றத் தலைப்பில் தொடங்கும் இந்த சுற்றுலாவுக்கு நிலையான கட்டணம் ரூ.58,946, டீலக்ஸ் கட்டணம் ரூ.62,535 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீலக்ஸ் கட்டணம் செலுத்துபவர்களுக்கு வசதியான அறைகள் ஒதுக்கப்படும்.
12 இரவுகள், 13 பகல்கள் கொண்ட இந்த சுற்றுலாவில், 300 பயணிகள், கேதார்நாத், பத்ரிநாத், கார்த்திக், ஜோஸிமத் நரசிம்மர் கோயில், குப்தகாசி, ரிஷிகேஸ் ஆகிய ஆன்மீகத் தலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
குப்தகாசியிலிருந்து கேதார்நாத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கு தனிக்கட்டணம் தேவையில்லை.
முதலில் ருத்ரபிரயாக் எனும் இடத்துக்கு சென்றதும் 100 பேர் வீதம் மூன்று குழுக்களாக பிரித்து, ஒவ்வொருக் குழுவையும் ஒவ்வொரு பகுதிக்கு எங்கள் சுற்றுலா மேலாளர்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுவர். ஒரு பயணி இந்த பகுதிகளுக்கு செல்வதாக இருந்தால், தங்குமிடம், பயணத்திட்டம் முழுவதும் அவரே திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். மிகவும் குறைந்தக் கட்டணத்தில் அனைத்து பயணச் செலவு, தங்குமிடம், உணவு என திட்டமிடப்பட்ட சேவையை ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி., வழங்குகிறது. இதை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.