பணம் கட்டி 24 ஆண்டுகளாகியும் வீட்டுமனை கிடைக்கவில்லை. ராமலிங்க கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தீக்குளிப்பு போராட்டம் அறிவிப்பு .
பணம் கட்டி 24 ஆண்டுகளாகியும் வீட்டுமனை கிடைக்கவில்லை :
நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவோம்
ராமலிங்க கூட்டுற சங்க உறுப்பினர்கள் அறிவிப்பு.
திருச்சி
திருச்சி உறையூரில் ராமலிங்க கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கம் நகைக்கடன், வீடு, வீட்டுமனை வாங்க உள்ளிட்ட கடன்களை வழங்கி வருகிறது.
இச்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 578 பேருக்கு கடந்த 2000ம் ஆண்டில் பிராட்டியூர் அருகே 54 ஏக்கர் நிலம் வாங்கி, வீட்டுமனைகளாக விற்பனை செய்தது. இதற்காக ஒவ்வொரு உறுப்பினரிடமும் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை வீட்டு மனைக்கு தகுந்தாற்போல சங்கம் சார்பில் பணம் பெறப்பட்டது. இதில், 560 பேருக்கு வீட்டுமனை முறையாக வழங்கி பத்திரம் பதிவு செய்யப்பட்டது.
மொத்தம் வாங்கிய நிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியின் நில உரிமையாளர் தனக்கு உரிய பணம் தரவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், 18 உறுப்பினர்களுக்கு வீட்டுமனை வழங்கப்படவில்லை. இதற்கிடையே அந்த நில உரிமையாளருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால், வீட்டுமனை கிடைக்காத 18 பேருக்கு மாற்று இடத்தில் வீடுமனை வழங்கப்படும் என கூட்டுறவு சங்க நிர்வாகம் கடந்த 2020ம் ஆண்டு உத்தரவாதம் அளித்தது.
ஆனால் 4.5 ஆண்டுகள் கடந்தும் அவர்களுக்கு வீட்டுமனை வழங்கப்படவில்லை.
இதனால் நொந்து போன சங்க உறுப்பினர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். மேலும், பணம் கட்டி 24 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் இல்லை. இதே நிலை நீடித்தால் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவோம் என தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.