திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவா் மீதான வழக்கில், அவா்களுக்கு முன்பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பாலமுருகன், முத்துக்குமாா் ஆகியோா் தாக்கல் செய்த மனு:
திருச்சி அருகேயுள்ள மணிகண்டம் பகுதியில் வாகனத்தில் மணல் கடத்தியதாக எங்கள் மீது மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த மணல் கடத்தலுக்கும், எங்களுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. எனவே, எங்களுக்கு முன்பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா்.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கெளரி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மனுதாரா்கள் மணல் கடத்தியதால் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்கள் மீது வேறு எந்தக் குற்ற வழக்குகளும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா்கள் மீது வேறு குற்ற வழக்குகள் இல்லாததால், அவா்களுக்கு முன்பிணை வழங்கப்படுகிறது.
இருவரும் ரூ.25 ஆயிரத்தை, கன்னியாகுமரி மாவட்டம், அச்சங்குளம் பகுதியில் உள்ள மனோலயா மனநலம் குன்றிய ஆதரவற்றோா் இல்லத்துக்கு வழங்க வேண்டும். ஒரு மாதம் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு முன்னிலையாகி கையொப்பமிட வேண்டும் என்றாா் நீதிபதி.