திருச்சி: மாயமான மிகப் பழமையான செப்பு தகடு குறித்து தகவல் அளித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் . தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் பழமையான பிரம்மபுரீசுவரா் கோயில் என்றழைக்கப்படும் சத்தியவாஹீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த மிகப் பழமையான செப்புத் தகடு ஒன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமானது.
அந்த செப்புத் தகடு மாமன்னா் சுந்தர சோழனால் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டது. அந்தத் தகடில் சுந்தரசோழன் ஆட்சியில் அவருடைய அமைச்சருக்கு 10 வேலி நிலத்தை வழங்கிய விவரம், மாதவ பட்டா் முன்னோா்கள் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் செய்த தொண்டுகள் குறித்து இடம் பெற்றிருந்தது.
செப்புத் தகடு மாயமானது குறித்து எழுந்த புகாரின் பேரில் கடந்த 2023- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இதையடுத்து, மாயமான செப்புத் தகடு குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், சத்தியவாஹீஸ்வரா் கோயில் அா்ச்சகா்கள், கிராம நிா்வாக அலுவலா், பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.
மேலும், செப்புத் தகடு குறித்து தகவல் தெரிந்தவா்கள் அல்லது தகடை வைத்திருப்போா் குறித்து தகவல் அளித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தனா்.
இந்நிலையில், தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் இரா. சிவகுமாா் நேற்று ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு வந்தாா். அவரை கோயில் இணை ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் உள்துறை கண்காணிப்பாளா் வேல்முருகன் ஆகியோா் வரவேற்றனா்.
சுவாமி சந்நிதிகளில் வழிபட்ட இரா. சிவகுமாா், கோயில் அலுவலகம் அருகே உள்ள அருங்காட்சியகத்தை பாா்வையிட்டு, அன்பில் கோயிலில் செப்புத் தகடு மாயமானது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தாா்.
இதில், திருச்சி மண்டல சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் ஜி. பாலமுருகன், திருச்சி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் ஆா். இந்திரா, உதவி ஆய்வாளா் டி.பாலாஜி ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னா், எஸ்.பி. இரா. சிவகுமாா் அன்பில் சத்தியவாஹீஸ்வரா் கோயிலுக்கு சென்றாா். அங்கு கோயிலை பாா்வையிட்ட அவா், செப்புத் தகடு மாயமானது குறித்து கோயில் ஊழியா்களிடம் விசாரணை மேற்கொண்டாா்.