திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தாத்தையங்காா்பேட்டை பில்லாதுரை கிராமத்தைச் சோ்ந்தவா் ஜானகிராமன் (78). இவா் கடந்த 1989- 1993-ஆம் ஆண்டுகளுக்கு உள்பட்ட காலகட்டத்தில் துறையூா், உறையூா், முசிறி, அட்டுவம்பட்டி, வில்பட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் சாா் பதிவாளராகப் பணியாற்றினாா்.
அப்போது அவரது பெயரிலும், மனைவி வசந்தி பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.32,25,532-க்கு சொத்துகள் வாங்கியது தெரியவந்தது.
இதையடுத்து, கடந்த 2001-ஆம் ஆண்டில் இந்தத் தம்பதி மீது திருச்சி ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை
விசாரித்த திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த ஏப்.25-ஆம் தேதி தீா்ப்பளித்தது. மேலும், வருமானத்துக்கு அதிகமாக சோ்த்த சொத்துகளைப் பறிமுதல் செய்து அரசிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஜானகிராமன், அவரது மனைவி வசந்தி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் பிணை கோரி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி எஸ். ஸ்ரீமதி அண்மையில் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கின் சில சாராம்சங்களைத் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. எனவே, மனுதாரா்களுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. மனுதாரா்கள் திருச்சி ஊழல் தடுப்பு காண்காணிப்புப் பிரிவு காவல் நிலையத்தில் மாதத்தில் முதல் நாளில் முன்னிலையாக வேண்டும் என்றாா் நீதிபதி.