நடப்பு ஆண்டு கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், கடந்த சில நாட்களாக வெப்பம் தணிந்து மழை பெய்து வருகிறது. மே 31ம் தேதி முன் கூட்டியே தென்மேற்கு பருவ மழை ஆரம்பமாகும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.. அதற்கேற்றவாறு, கோடை மழை கடந்த ஒரு மாதமாகவே தமிழகத்தில் கொட்டி வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டிய கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. சென்னையிலும் சில நாட்களாகவே லேசான மழை பெய்து வருகிறது. அந்தவகையில், தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள் என தமிழகத்தில் மழை பெய்து வருகிறது..
வேலூர், திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில்தான், வங்கக்கடலில் புயல் உருவாகியிருக்கிறது.. இந்த புயலுக்கு ரெமல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.. இந்த வருடத்தில் வீசும் முதல் புயல் இதுவாகும். இதுகுறித்து இந்திய வானிலை மையமும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த புயல் நாளை இரவு மேற்கு வங்காளத்தில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் மீண்டும் வரும் 27 ஆம் தேதி முதல் வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- ஊமை வெயிலை தொடர்ந்து வடக்கில் இருந்து நிலப்பகுதிக்கு மழை மேகங்கள் நகர்ந்து வருகின்றன.
வட சென்னை பகுதியில் மழை பெய்து வருகிறது. சென்னையின் அனைத்து இடங்களிலும் மழை இருக்காது.
வங்காள விரிகுடா – மேற்கு வங்காள பகுதிக்கு புயல் நகர்ந்த பிறகு வறண்ட வானிலை நிலவும். 41 – 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் மே 27 முதல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருக்கும். இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
நேற்று மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 0530 மணி அளவில் வலுப்பெற்று, வடக்கு திசையில் நகர்ந்து, இன்று (25.05.2024) மாலை புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து, நாளை (26.05.2024) காலை தீவிர புயலாக வலுப்பெற்று நாளை (26.05.2024) நள்ளிரவு வங்க தேச- கேப்புப்பாராவிற்கும் மேற்கு வங்காளம் சாகர் தீவிற்கும் இடையே கரையை கடக்க கூடும்.
புயல் கரையை கடக்கும் நேரம் தரைக்காற்று மணிக்கு 110-120 கி.மீ வேகத்திலும் இடை இடையே 135 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இன்று தமிழகத்தில் வெகுசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சரி இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை முதல் 31ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலையை பொறுத்த அளவில், அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பாகவும், இயல்பை விட சற்று உயரக்கூடும்.
நாளை அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். 27 முதல் 29 வரை அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும் / இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.
சென்னையை பொறுத்த அளவில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39″ செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 – 30 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இதேபோல், இன்றும் நாளையும், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
28ம் தேதி குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பாகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 29ம் தேதி குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .