தொழில்நுட்பம் சார்ந்த எந்தவொரு சிறுதொழில் அல்லது ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்க வேண்டுமென்றாலும், அதற்கான திறனை வளர்த்துக்கொள்வது அவசியமாகும். இதனை பல்வேறு இணைய வழி பாடத்திட்டங்கள் அல்லது விளக்க வீடியோக்கள் மூலம் இன்றைய கால தலைமுறையினர் பெற்றுக்கொள்கின்றனர்.
இப்படி இணையத்தின் உதவியால் மிகப்பெரும் தொழில்முனைவோர்களாக மாறிய பலரை உதாரணமாக காட்டலாம். அப்படியொருவர் தான் கிஷான் பகாரியா.
இணையத்தின் மூலம் பல திறன்களை கற்றுக்கொண்ட இவர், தன்னுடைய புத்திசாலித்தனத்தாலும் கடுமையான உழைப்பாலும் வெற்றிகரமான தொழிலதிபராக மாறி கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார். புதிதாக கற்றுக்கொள்வதில் உள்ள ஆர்வமும், புதுமையான சிந்தனையும் இவரை புதிய நிறுவனத்தை தொடங்கவைத்தது. தான் தொடங்கிய நிறுவனத்தை இன்று அவர் வேர்ட்பிரஸின் (Word Press) தாய் நிறுவனமான ஆட்டோமேட்டிக்கிடம் ரூ.416 கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகார் பகுதியைச் சேர்ந்த கிஷான், Texts.com என்ற புதுமையான மெசேஜ் செயலியை உருவாக்கினார். இந்த செயலி உங்களிடம் இருக்கும் பல்வேறு மெசேஜ் செயலிகளை பராமரிக்கும் தளமாக செயல்படும் வகையில் இதை கிஷான் உருவாக்கியுள்ளார்.
இந்த செயலி எந்தவித தடங்கலும் இல்லாமல் வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் (தற்போது X), டெலிகிராம் என அனைத்து பிரபல செயலிகளையும் ஒருங்கிணைத்து ஒரே இண்டர்ஃபேஸின் கீழ் கொண்டுவருகிறது. தேவைப்பட்டால் எதிர்காலத்தில் கூடுதலாக அப்கிரேடுகள் செய்யும் திட்டமும் இந்த செயலியில் உள்ளது.
கிஷான் உருவாக்கிய இந்த புதுமையான செயலி, ஆட்டோமெட்டிக் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிறுவனர் மேட் முலன்வெக்கின் கவனத்தை ஈர்த்தது. இறுதியில் 26 வயதான கிஷான் தான் உருவாக்கிய Texts.com செயலியை அமெரிக்காவைச் சேர்ந்த ஆட்டோமெட்டிக் நிறுவனத்திடம் சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.416 கோடி) விற்பனை செய்தார்.
கிஷான் பகாரியா திபுரூகாரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் அதே ஊரில் உள்ள அக்ரசென் அகாடமியில் 9 மற்றும் 10ம் வகுப்பை நிறைவு செய்தார். ஆனால் கிஷான் கல்லூரிக்குச் செல்லவில்லை. அதற்குப் பதிலாக இணையம் மூலம் பல திறன்களை பெற்று தன்னுடைய அறிவை வளர்த்துக்கொண்டார்.
இதில் அவர் படித்த பெரும்பாலான ஆன்லைன் வகுப்புகள் இணையத்தில் இலவசமாக கிடைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.