போலீசார் அழைத்து சென்ற பிரபல ரவுடியை என்கவுண்டர் செய்ய உள்ளதாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திருச்சி கலெக்டர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் .
திருச்சியில் விசாரணைக்காக போலீஸாா் அழைத்துச் சென்ற குற்றவாளி குறித்த விவரங்கள் தெரியாததால், அவரின் உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் இல்லத்தை நேற்று இரவு முற்றுகையிட்டனா். பின் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டம், குழுமணி அருகேயுள்ள கோப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஏ. நாகராஜ் (வயது 28). இவா் மீது திருச்சி மாவட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இவரை கடந்த இரு நாள்களுக்கு முன்பு திருச்சி மாவட்ட தனிப்படை போலீஸாா் விசாரணைக்காக அழைத்துச் சென்றனராம். ஆனால், இரு நாள்களாகியும் அவரை எங்கு வைத்துள்ளனா் என்ற விவரம் உறவினா்களுக்கு தெரியவில்லை. இதுகுறித்து நாகராஜின் மனைவி ஹேமா மற்றும் குடும்பத்தினா் காவல் நிலையங்களில் விசாரித்தும் பயனில்லை.
இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் போலீசார் நாகராஜனை என்கவுண்டர் செய்து விடுவார்கள் என்ற பயத்தில் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் உள்ளிட்ட சுமாா் 50 போ், திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியரின் இல்லத்தை நேற்று இரவு முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனா். தொடா்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடம் வந்த கே.கே. நகா் போலீஸாரிடம், நாகராஜ் குறித்த விவரங்கள் தெரியும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.