Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி தேரோட்டம்.

0

 

திருச்சி தென்னூர்
உக்கிர மாகாளியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி தேரோட்டம்.
திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருச்சி தென்னூரில் பிரசித்தி பெற்ற உக்கிர மாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. சோழ மன்னர்களின் குலதெய்வமான மகிஷாசுரமர்த்தினியின் வடிவமாக விளங்கி வரும் உக்கிரமாகாளியம்மன், மன்னராட்சி முடிந்து, மக்களாட்சி மலர்ந்த பின்பும், கிராம தேவதையாக மக்களை காத்து வருவதாக நம்பிக்கை.

இக்கோயிலில் ஆண்டுதோரும் குட்டி குடித்தல் மற்றும் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், உக்கிர மாகாளியம்மன் ஆணைப்படி, சித்ரா பௌர்ணமியில் தேரோட்டம் நடத்த, கோயில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன் நன்கொடையாளர்கள் மூலமாக, 60 லட்ச ரூபாய் செலவில், கடந்த ஆண்டு மரசிற்பத்தில் தேர் செய்யும் பணி துவங்கப்பட்டது.
சிறப்பம்சங்கள்
முழுவதும் இலுப்பை மரத்தால் செய்யப்பட்டுள்ள புதிய தேரானது, கைத் தேர்ந்த சிற்ப கலைஞர்களால், 29 அடி உயரத்திற்கு வடிவமைக்கப்பட்டது.
இதில் அம்மன் கர்ப்ப கிரபத்தில் எவ்வாறு அருள் புரிகிறாரோ அதேபோன்று ரதமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
தேரின் நான்கு சக்கரங்களும், நான்கு வேதங்களாகவும், தேரின் வடம் அம்பாளின் இரு கரங்களாகவும் பாவிக்கப்படுகிறது.
தேரின் சிறப்பு அம்சமாக, சப்த கன்னிமார்கள், சந்தன கருப்பண்ணசாமி, மதுரை வீரன், ஆஞ்சநேயர், துர்க்கை, அஷ்ட காளியம்மன், சாம்புக மூர்த்தி, பள்ளி கொண்ட பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களின் மரச் சிற்பங்கள் தத்ரூபமாக செதுக்கப்பட்டிருந்தன.

தேர்த் திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில், முதல் முறையாக சித்ரா பௌர்ணமி தினமான நேற்று (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக, காலை, 10:30 மணி முதல், 11 மணிக்குள் அம்மன் திருத்தேர் தட்டில் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள்”ஓம்சக்தி… பராசக்தி..” கோஷங்கள் முழங்க, தாரதப்பட்டைகள், மேள தாளங்கள் ஒலிக்க, தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

இதில் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை தெய்வீக மகா சபை உறுப்பினர்கள் மற்றும் தென்னூர் கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.