தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் செந்தில்நாதன் தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பின் ஈடுபட்டு வருகிறார் . நேற்று திருச்சி மேற்கு தொகுதி காஜாமலை, இந்தியன் வங்கி காலனி , கிராப்பட்டி , எடமலைப்பட்டி புதூர், ராமச்சந்திரா நகர் போன்ற பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .
இன்று காலை ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் பகுதி மருதாண்டக்குறிச்சியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து மல்லியம்பத்து. பேரூர், எகிரிமங்கலம், முள்ளிக்கரும்பூர் , குழுமணி, கோப்பு, எட்டரை, பேசம்பட்டி , கீரிக்கல்மேடு , புலியூர்,போதாவூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .
நடுவே எட்டரை கிராமத்தில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேசிய திருச்சி அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் கூறுகையில் : வெளிநாட்டில் பொருளாதாரம் பயின்று நல்ல சம்பளத்தில் பணிபுரிந்து வந்தேன் , எனது தந்தை காவல்துறையில் உயர் பதவியில் பணியாற்றியவர் தாயார் கல்லூரி பேராசிரியை . பெற்றோர்கள் அரசியல் வேண்டாம் எனக் கூறியும் பொது மக்களுக்கு சேவை செய்வதற்கான வழி அரசியல் மட்டுமே என எண்ணி அரசியலுக்கு வந்தவன் நான்.

கடந்த இரண்டு வருடங்களாக திருச்சி மாமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றி வந்தது அனைவருக்கும் தெரியும் . ஆளுங்கட்சி கவுன்சிலராக இல்லாமல் 12 வருடங்களாக போடாத சாலையை போராடி போட வைத்தேன் . இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு அரிசி பதம் என்பது போல் நாடாளுமன்றம் சென்றால் உங்களுக்காக எனது குரல் ஒலிக்கும் என்பது மட்டும் உண்மை. 100 நாள் திட்டம் மத்திய அரசின் கீழ் வருவது இதனை தமிழக எம்பிகள் கண்டு கொள்வதே இல்லை , ஆனால் நான் கண்டிப்பாக இதனை திருச்சி தொகுதியில் முறைப்படுத்த பாராளுமன்றத்தில் எடுத்துரைப்பேன் .
ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் அலுவலகம் அமைத்து வார வாரம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்துவேன் என உறுதி கூறுகிறேன் . நான் திருச்சியிலே பிறந்து வளர்ந்ததால் திருச்சி தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து உடனடியாக நிறைவேற்றுவேன் .
மத்தியில் ஆட்சி அமைக்கப் போகும் பாஜக அரசுக்கே நீங்கள் வாக்களிக்க வேண்டும் இல்லையென்றால் உங்கள் வாக்கு
விழலுக்கு இறைத்த நீராக வீணாகப் போகும் .
எனவே மத்தியில் அரசமைக்க போகும் பாஜக கூட்டணி வேட்பாளரான என்னை குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைப்பீர்கள் என உங்களை கரம் கூம்பிக் கேட்டுக் கொள்கிறேன் என பேசினார் .
இந்த நிகழ்வில் பாஜக மாவட்ட செயலாளர் ராஜசேகரன், அமமுக நிர்வாகிகள் பெஸ்ட் பாபு , கல்நாயக் சதீஷ் , தருண், நாகூர் மீரான் மற்றும் ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.