5 கிலோமீட்டர் பறக்கும் மேம்பாலம் அமைப்பேன். காந்தி மார்க்கெட் வியாபாரிகளிடம் அதிமுக வேட்பாளர் கருப்பையா உறுதி .
திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா, காந்தி மார்க்கெட்டில் கீரை கட்டுகளை விற்பனை செய்து கொடுத்து, வியாபாரிகளிடம் வாக்கு சேகரிப்பு.
திருச்சி காந்தி மார்க்கெட்டில், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இவர்களிடம், திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா, இன்று அதிகாலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது வியாபாரிகள் மத்தியில் கருப்பையா பேசிய போது:-
நாடாளுமன்ற உறுப்பினராக என்னை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் உங்களுக்காக, உங்களின் குரலாக, உங்களுக்கு ஆதரவாக வியாபாரிகளின் பிரதிநிதியாக, வியாபாரிகளின் எண்ணமாக, நிச்சயமாக என் எண்ணம் பிரதிபலிக்கும்.
உங்களுக்காக போராடுவேன், உங்களுக்காக குரல் கொடுப்பேன் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களிடம் எத்தனையோ பேர் வாக்கு சேகரிக்க வந்திருக்கலாம், நாங்கள் எது வேண்டுமானாலும் செய்து தருவோம் என அவர்கள் கூறியிருக்கலாம். ஆனால் நிச்சயமாக எந்த ஒரு நேரத்திலும் எப்பொழுதும், எந்த ஒரு இடத்திலும் இந்த கருப்பையா வியாபாரிகளின் பக்கம் தான் உறுதியாக இருப்பேன் என்பதை சொல்லிக்கொள்கிறேன் என்றார்.
மேலும் பேசிய அவர், இந்த காந்தி மார்க்கெட் ஒட்டுமொத்த வியாபாரிகளும், நீங்கள் இரட்டை இலைக்கு ஆதரவளித்து, அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் எனக்கு வெற்றியைத் தேடித் தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும், உங்களது பிரதிநிதியாக இந்த திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தவர்.
உங்களுக்கு நான் மீண்டும் ஒரு உறுதியான உத்தரவாதத்தை சொல்கிறேன். இந்த மார்க்கெட் இந்த இடத்திலேயே நீடிக்கவும் , இந்த மார்க்கெட் பொது மக்களுக்கு எந்த வித இடையூறும் இன்றி செயல்பட 5 கிலோமீட்டர் பறக்கும் மேம்பாலம் அமைக்க முயற்சி மேற்கொள்வேன் . எப்பொழுதும் வியாபாரிகள் பக்கம்தான் இந்த கருப்பையா நிற்பான் என்பதை உத்திரவாதமாக சொல்கிறேன் என கூறினார்.
அதனைத் தொடர்ந்து, தரைக்கடை வியாபாரிகளிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது கீரை விற்பனை செய்து கொண்டிருந்த பெண்மணியிடம், கீரை கட்டுகளின் விலை அறிந்து கொண்டு, அதனை விற்பனை செய்து கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, அந்தப் பெண்மணி இரட்டை இலைக்கு தான் எங்களது வாக்குகள் என உறுதியளித்தார். இதனை கேட்டு வேட்பாளர் கருப்பையா உள்ளிட்ட அதிமுகவினர் உற்சாகமடைந்தனர்.
அதன் பின், காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் இயங்கி வரும் பூக்கடை பகுதிக்கு சென்ற அவருக்கு, அங்கு புதிதாக கட்டி வைக்கப்பட்டிருந்த ஆளுயர மாலை அணிவித்து, பூக்கடை வியாபாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து காய்கறி கடை, மொத்த வியாபாரிகள், உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த வாக்கு சேகரிப்பின் போது, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன், கழக அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், பகுதி கழகச் செயலாளர்கள் ரோஜர், சுரேஷ் குப்தா உள்ளிட்ட அதிமுகவினர் பலர் பங்கேற்றனர்.