அட இப்படியும் தங்கத்தை கடத்தலாமா? திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்திய நபரிடம் ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு குறைந்தது ஒரு விமானத்திலாவது ஒரு கடத்தல் நிகழ்வு அரங்கேறி வருகிறது.
முதலில் தாங்கள் கொண்டு வரும் உடமைகளில் தங்கம் கடத்தி வரப்பட்ட நிலையில், காலப்போக்கில் காலணிகள், தலைமுடி, உடலில் மறைத்து வைத்து கடத்தப்படும் நிகழ்வும் அதிகரித்து வருகிறது.
இன்று ஷார்ஜாவிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தனது ஜீன்ஸ் பேண்டின் பின்பக்கம் முட்டிக்கு கீழ் பகுதியில் தங்கத்தை ஸ்ப்ரே செய்து கடத்தி எடுத்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 24 லட்சத்து 96 ஆயிரம் மதிப்புள்ள 390 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.