வெயில் காலம் என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது தர்ப்பூசணிப் பழம்தான். ஆனால் அதை வாங்கும்போது பலருக்கு பல குழப்பங்கள் ஏற்படும். தர்பூசணிப் பழத்தை தேர்வு செய்து வாங்குவது கடினமாக இருந்தாலும், சில குறிப்பிட்ட விஷயங்களை கவனிப்பதன் மூலம் தரமான பழங்களைத் தேர்வு செய்து உங்களால் வாங்க முடியும்.
முதலில் ஒரு தர்ப்பூசணிப் பழம் வாங்கச் செல்கிறீர்கள் என்றால், அதில் வட்டமான அல்லது ஓவல் வடிவத்தில் இருக்கும் தர்பூசணி சிறந்தது. ஒழுங்கில்லாமல் இருக்கும் பழங்களைத் தவிர்க்க வேண்டும். ஒழுங்கில்லாத பழங்கள் எல்லா இடங்களிலும் சீராகப் பழுத்திருக்காது.
தர்பூசணிப் பழம் கனமாக இருந்தால் அது முறையாகப் பழுத்து, தண்ணீர் நிறைந்துள்ளது என்பதன் அறிகுறியாகும்.
நீங்கள் வயலுக்கே சென்று நேரடியாக வாங்குகிறீர்கள் என்றால், பழத்தை கொஞ்சம் புரட்டிப் பார்த்து அதன் அடிப்பகுதி மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கிறதா எனப் பாருங்கள். இது பழம் நீண்ட நாட்களாக தரையில் இருக்கிறது என்பதற்கான அறிகுறி. அப்படி இருந்தால் சரியான அளவில் இனிப்பு மற்றும் சுவை கொண்டதாக இருக்கும்.
தர்பூசணிப் பழத்துடன் ஒட்டி இருக்கும் காம்பு பச்சையாக இருந்தால் அது இன்னும் பழுக்கவில்லை என அர்த்தம். காம்பு கொஞ்சமா காய்ந்து பழுப்பு நிறத்தில் இருந்தால், அது பழுத்த தர்பூசணியின் அறிகுறி.
தர்பூசணிப் பழத்தை தட்டிப் பார்த்தால், உள்ளே காலியாக இருப்பது போல் சத்தம் வந்தால், அது பழுத்துள்ளது என அர்த்தம். இதுவே மந்தமான சத்தம் வந்தால் அது இன்னும் சாப்பிடத் தயாராகவில்லை என்று அர்த்தம்.
தர்பூசணிப் பழம் பளபளப்பாக இருந்தால் அதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சரியாக முற்றி பழுக்கும் நிலைக்கு வராத காய்களே பளபளப்பாக இருக்கும்.
அதேபோல தர்பூசணியைத் தேர்வு செய்யும்போது கொஞ்சமாக அடிபட்டு இருந்தாலும் அந்தப் பழத்தை வாங்க வேண்டாம். ஏதேனும் ஒரு பக்கத்தில் கொஞ்சமாக அழுகி இருந்தாலும் உள்ளே பழத்தின் தன்மை நன்றாக இருக்காது.
இந்த உதவிக் குறிப்புகளைப் பின்பற்றினால் நீங்கள் ஒவ்வொரு முறையும் பழுத்த மற்றும் அதிக இனிப்பு சுவையுடைய தர்பூசணிப் பழங்களை தேர்வு செய்து வாங்க முடியும். நன்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நல்ல அறிகுறி உடைய பழங்களை தேர்வு செய்யுங்கள், மோசமான அறிகுறி உடைய பழங்களைத் தவிருங்கள். இந்த குறிப்புகளைப் பயன்படுத்தி நீங்கள் ஓரிருமுறை தர்பூசணிப் பழம் வாங்கினாலே அதுகுறித்த எல்லா விஷயங்களும் உங்களுக்குத் தெரிந்துவிடும்.