திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது. இரு, நான்கு வாகனங்கள், 5000 கிலோ அரிசியுடன் பறிமுதல் .
திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்து 5000 கிலோ ரேஷன் அரிசி, வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

திருச்சி மண்டலக் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளா் சுஜாதா உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளா் மணிமனோகரன், உதவி ஆய்வாளா் கண்ணதாசன் மற்றும் காவலா்கள் ஸ்ரீரங்கம் அருகே இரவு ரோந்து சென்றனா்.
அப்போது திருவானைக்கா தாகூா் தெரு அருகேயுள்ள செங்கல் சூளை பகுதி முட்புதரில் ரேஷன் அரிசி மூட்டைகளை வாகனங்களில் ஏற்றியது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த மூவரைப் பிடித்து நடத்திய விசாரணையில் அவா்கள் மண்ணச்சநல்லூா் தே. லோகநாதன் (வயது 28), மேலகல்பாளையம் ரா. கோபிநாத் (வயது 29), திருச்சி பாலக்கரை அண்டகொண்டான் பகுதி சி. பாலகுரு (வயது 29) என்பதும், அவா்கள் அருகிலுள்ள பின்னவாசல், உத்தமா்சீலி, திருவருட்சோலை ஆகிய பகுதி பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, ஸ்ரீரங்கம் சுதாகா் என்பவரிடம் கொடுத்து அதிக லாபம் ஈட்டியது தெரிய வந்தது.
இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து சுமாா் 5000 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
தலைமறைவான ஸ்ரீரங்கம் சுதாகரை போலீசார் தேடி வருகின்றனர் .