Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கார் வேண்டாம் அரசு வேலை தான் வேண்டும் . அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கிய வீரர் கோரிக்கை.

0

 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கி கார் பரிசாக பெற்ற மாடுபிடி வீரர் கார்த்திக், “எங்களுக்கு கார் வேண்டாம், அரசு வேலை கொடுக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

பொங்கல் திருநாளையொட்டி மதுரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு ஜனவரி 15ஆம் தேதி நடைபெற்றது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 817 காளைகள் களம் கண்டன. 435 மாடுபிடி வீரர்கள் 10 சுற்றுகளாக அனுமதிக்கப்பட்டனர். இதில், 17 காளைகளை பிடித்து அவனியாபுரம் கார்த்திக் முதலிடம் பெற்றார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 17 காளைகளைப் பிடித்த கார்த்திக்கிற்கு தமிழக முதல்வர் சார்பில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான கார் வழங்கப்பட்டது. அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கார்த்திக்கிடம் கார் சாவியை வழங்கினர். மேலும், கறவை பசு ஒன்றும், மாடுபிடி வீரர் கார்த்திற்கு பரிசாக வழங்கப்பட்டது.

கார்த்திக், கடந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை பிடித்து இரண்டாம் இடம் பிடித்து பைக் பரிசாக பெற்றிருந்தார். அதற்கு முன்பு, 2022ஆம் ஆண்டு நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 24 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்து சொகுசு காரை பரிசாக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டில் அசத்தும் கார்த்திக், பி.எஸ்.சி உடற்கல்வி பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவரது பெற்றோர் கூலி வேலை செய்பவர்கள். கூலி வேலை செய்து கார்த்திக்கை படிக்க வைத்த நிலையில், கார்த்திக் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வருகிறார். மற்ற நாட்களில் கொத்தனார் வேலைக்குச் சென்று வருகிறாராம்.

இந்நிலையில், மீண்டும் கார் பரிசாக பெற்ற ஜல்லிக்கட்டு வீரர் கார்த்திக், தமிழக அரசுக்கு ஒரு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளார். கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒவ்வொரு முறையும் ஜல்லிக்கட்டில் பரிசு பெறும்போது என்னை போன்ற மாடுபிடி வீரர்களுக்கு மற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுகிறவர்களுக்கு வழங்குவது போல் அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறேன்.

ஆனால், தற்போது வரை தமிழக அரசு இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த முறையும் எனக்கு கார் பரிசு கிடைத்துள்ளது. இந்த காரை வைத்து நாங்கள் என்ன செய்வது? ஏற்கனவே பரிசாக வாங்கிய காரை விற்றுவிட்டேன். கார் எங்களுக்கான பரிசு கிடையாது. அரசு வேலை கொடுத்தால் எப்படியாவது பிழைத்துக் கொள்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும், ஜல்லிக்கட்டில் பரிசாக கார் வழங்குவது பற்றி விமர்சித்திருந்தார். “நம்முடைய கலாச்சாரம், பண்பாட்டில் ஒரு இயக்கமாக இருக்கிறது ஜல்லிக்கட்டு. அப்படிப்பட்ட ஜல்லிக்கட்டில் அரசு என்ன பரிசு அறிவிக்கிறார்கள். ஒரு கார். இந்த காரை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? அவர்கள் வீட்டில் கார் நிறுத்துவதற்கு கூட இடம் இருக்கப் போவதில்லை.

அந்த காருக்கு போடுவதற்கு பெட்ரோல் எங்கே அவர்களுக்கு இருக்கப் போகிறது. அந்த காரை வைத்து அவர் என்ன செய்யப் போகிறார். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் நல்ல ஒரு டிராக்டர் வாங்கி கொடுங்கள். டிராக்டரில் கேரியர், கலப்பை எல்லாம் போட்டு ஒரு 10 லட்சம் 12 லட்சம் ரூபாய் இருக்க போகிறது. முதல் பரிசு டிராக்டர் வாங்கி கொடுங்கள். சும்மா ஆல்ட்டோ கார் கொடுக்கிறோம், இந்த கார் கொடுக்கிறோம், சோப்பு டப்பா கொடுக்குறோம் என்பதெல்லாம் வேண்டாம்.” என ஐடியா கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டு வீரர்கள், படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கான அங்கீகாரமாக, மற்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுவது போல வேலைவாய்ப்பினை அரசு வழங்க வேண்டும் என்ற குரல்கள் வலுவாக ஒலித்து வருகின்றன. அரசு செவிமடுக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.