Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நீ மாத்திரை கொடுத்து நாங்கள் வாழனுமா? பட்டியலின பெண் மருத்துவ பணியாளர் மீது தாக்குதல்.

0

 

நர்சிங் பட்டயப் படிப்பு முடித்த தனலெட்சுமி என்ற பிரேமா, மதுரை மாவட்டம் மேலூர் அருகே சேக்கிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் `மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் தற்காலிக சுகாதார பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 4 ஆம் தேதி உடப்பம்பட்டி அங்கன்வாடி மையம் அருகே அமர்ந்து மக்களுக்கு மாத்திரைகளை கொடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக பெயின்டரான கணவர் செந்திலும் உடனிருந்தார்.

அப்போது அங்கு வந்த மற்றொரு சமூகத்தை சேர்ந்த அழகன் என்ற குமார், தனலெட்சுமியிடம் “நீ மாத்திரை கொடுத்து எங்க ஆளுக உசுரு வாழனுமா? மாத்திர கொடுக்கிறத மொதல்ல நிறுத்து” என்று அசிங்கமாகவும், சாதியை சொல்லியும் ஒருமையில் பேசி தகராறு செய்துள்ளார். அவர் கொடுத்துக் கொண்டிருந்த மாத்திரைகள் சிதறடிக்கப்பட்டது.

`வேலை செய்வதை தடுக்காதீர்கள்’ என்று தனலெட்சுமி எவ்வளவோ கேட்டுக்கொண்டும், அவரின் சேலையை பிடித்து இழுத்து கடும் வன்மத்தோடு தோள்பட்டையிலும், தலையிலும் அடித்திருக்கிறார். இதனால் தனலெட்சுமி பலத்த காயம் அடைந்தார். அவர் தாக்கப்படுவதை தடுத்த கணவர் செந்திலையும் கடுமையாக தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தியுள்ளார். அங்கிருந்த மக்கள் இதை கண்டிக்காமல் வேடிக்கை பாரத்துக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

அதன்பின், பலத்த காயத்திற்கு ஆளான இருவரும் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

25 ஆண்டுகளுக்கு முன் மேலூர் அருகே மேலவளவில் பட்டியிலின ஊராட்சித் தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை மக்கள் இன்றுவரை மறக்கவில்லை. ஆனாலும், பட்டியலின மக்கள் மாற்று சமூகத்தினரால் தாக்கப்படும் சம்பவங்கள் மேலூர் வட்டாரத்தில் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் தெரிவிக்கும் போது, “மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் தற்காலிக சுகாதார பணியாளராக பணியாற்றி வரும் பட்டியலினத்தை சேர்ந்த தனலெட்சுமி என்ற பிரேமாவும் அவர் கணவரும் தாக்கப்படுள்ளனர். வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிகிறது.

இது போன்ற கடுமையான சாதி வெறிக் தாக்குதல்கள் மீதான விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படியான நிவாரணம் உடனடியாக வழங்கிட வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.