Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

3 ஆண்டுகளில் திருச்சி மாநகராட்சி திட்டப் பணிகளுக்கு மட்டும் ரூ.2600 கோடி ஒதுக்கி உள்ளார் நமது முதல்வர் . அமைச்சர் கே.என். நேரு

0

 

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் கிராமப்புற நகர்ப்புற மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார்.
எம் எல் ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன். பழனியாண்டி சவுந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், அப்துல் சமது எம்எல்ஏ மேயர் அன்பழகன் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் ஒன்றிய குழு தலைவர் துரைராஜ், மாநகராட்சி கமிஷனர் வைத்தியநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு பேசும் போது கூறியதாவது;-

கலைஞர்
எப்போது எல்லாம் முதலமைச்சராக இருந்தாரோ அப்போதெல்லாம் திருச்சி மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டிருக்கிறது.

இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு இந்த 3 ஆண்டு காலத்தில் மட்டும் திருச்சி மாநகராட்சிக்கு மட்டும் திட்டப் பணிகளுக்கு ரூ.2600 கோடி நிதி ஒதுக்கி தந்திருக்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் புதிய சாலைகள் , காவேரி பாலத்தில் புதிய பாலம் ,அண்ணா சாலையில் இருந்து தலைமை தபால் நிலையம் வரை எலிவேட்டர் உயர் வட்ட பாலம்,
நீதிமன்றத்தில் இருந்து அல்லித்துறை வரை புதிய சாலை ஆகிய திட்டங்கள் வர இருக்கிறது.

இந்த விழா நடைபெறும் பகுதியில்
மகளிர் சுய உதவி குழு பெண்கள் எல்லாம் அமரும் வகையில் விரைவில் ரூ. 45 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்ட இருக்கிறோம். அதே போன்று கலெக்டரின் முயற்சியால் மக்கள் பொழுதுபோக்கு வகையில் ரூ. 20 கோடியில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

மணப்பாறை மற்றும் மருங்காபுரி சுற்றுவட்டார பகுதி மக்களின் வசதிக்காக புதிதாக ரூ. 560 கோடியில் விரைவில் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்படும்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் தமிழகத்தில் 4 கோடியே 35 லட்சம் மக்களுக்கு மட்டுமே பாதுகாக்கப்பட்ட கூட்டு குடிநீர் வழங்கப்பட்டது.
ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க 107 திட்டங்கள் தொடங்கி நடந்து வருகிறது.

இன்றைய தினம் இந்த நிகழ்ச்சியில் 2000 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது.
அதில் நகர்ப்புறத்தில் வசிக்கக்கூடிய மக்கள் 500 பேருக்கு பட்டா வழங்க இருக்கிறோம்.

ஏற்கனவே திருச்சி மேற்கு தொகுதியில் 1500 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அதேபோன்று மீண்டும் 1500 பேருக்கு இந்த ஆட்சியில் பட்டா வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.