பெண்களிடம் தாலி
பறித்த இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை.
திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு.
திருச்சி, துப்பாக்கித்தொழிற்சாலை அருகேயுள்ள அண்ணா நகர், தொகுதி 1 பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மனைவி ரமா (வயது 51). இவர் கடந்த 2016 ஆவது ஆண்டு செப்டெம்பர் 9 ஆம் தேதி, குடியிருப்புக்கு அருகிலுள்ள கட்டளை வாய்க்கால் கரையில், தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்த நிலையில் வந்த இருவர், ரமா மீது மோதுவதுபோல வேகமாக வந்துள்ளனர். இதில் நிலை தடுமாறிய ரமா கீழே விழுந்தார். உடனே அவருக்கு உதவுவதுபோல வந்த இருவரும் அவரது கழுத்தில் கிடந்த ஏழரை பவுன் தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றனர். ரமா சங்கிலியை விடவில்லை. எனவே கத்தியை காட்டி மிரட்டி சங்கிலியை பறித்துச்சென்றுள்ளனர்.
அதே நாளில் சிறிது நேரம் கழித்து அண்ணா நகர் தொகுதி 3 பகுதியைச் சேர்ந்த ரவிக்கண்ணன் மனைவி லதா என்பவர் அதே பகுதியில் வைஷாலி என்பவரின் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவர்களை வழிமறித்த மர்ம நபர்கள் அதேபோல கத்தியைக் காட்டி மிரட்டி வைஷாலியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துச்சென்றுள்ளனர். ஒரே நாளில் அடுத்த ஒரு மணி இடைவெளியில் நடந்த இந்த சம்பவங்கள் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், திருச்சி அம்பிகாபுரம் ரத்தினசாமி தெருவை சேர்ந்த பா. வெற்றிவேல் (வயது 24) மற்றும் திருச்சி சங்கிலியாண்டபுரம் கலைஞர் தெருவை சேர்ந்த ஞா. ஜோன்ஸ் டார்வின் ( வயது 21) ஆகிய இருவரும் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.
இவை தொடர்பான வழக்குகள் திருச்சி தலைமை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனித்தனியாக நடந்து வந்தது. இரு வழக்குகளிலும் தனித்தனியாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் முதல் வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறையும் நீதிபதி மீனாசந்திரா தீர்ப்பளித்தார். அதே போல 2 ஆவது வழக்கிலும் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசுத்தரப்பு வழக்குரைஞராக ஹேமச்சந்திரன் ஆஜரானார்.
இவர்கள் மீது மற்றொரு வழக்கு:
சங்கிலிப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும், இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இயற்கை உபாதைக்காக சென்றபோது அந்த வாகனத்தை திருடிச்சென்றுதான் சங்கிலிப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். வாகனத் திருட்டு தொடர்பாக மற்றொரு வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.