பிரபஞ்ச திருநங்கை அழகி போட்டியில் திருச்சி ரியானாவுக்கு 2ம் இடம்.
புதுடெல்லியில் நடந்த திருநங்கை பிரபஞ்ச அழகி போட்டியில் திருச்சி ரியானாவுக்கு 2வது இடம் கிடைத்தது.
திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் திருநங்கை ரியானாசூரி (வயது 26). எம்எஸ்சி பட்டம் பெற்றுள்ளார். நடனத்தில் டிப்ளமோ முடித்து உள்ளார்.
மாடலிங் துறையில் ஜொலித்து வரும் இவர், மாவட்ட மற்றும் மாநில அளவிலான திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் வெற்றி பெற்று கடந்த ஏப்ரல் மாதம் ‘மிஸ் இந்தியா’ போட்டியில் பங்கேற்றார். இதில் அவர், மிஸ்டேலண்ட் பட்டத்தை தட்டி சென்றார். திருநங்கையர் அழகி போட்டிகளுக்கான தென்னிந்திய தூதுவராகவும் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதே சமயத்தில் திருநங்கைகளுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி பெற்றிருந்தார்.
இந்நிலையில் இந்தாண்டு ‘மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ் 2023 ’ என்ற தலைப்பில் கடந்த 2ம் தேதி முதல் 4ந்தேதி வரை திருநங்கை பிரபஞ்ச அழகி போட்டி புதுடெல்லியில் நடந்தது. இதில் இந்தியா, வியட்நாம், கம்போடியா, இந்தோனேசியா, பிரேசில், ஹோண்டுராஸ், ஈக்வடார், போர்ட்டோ ரிக்கோ, மொரிஷியஸ் உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து மொத்தம் 12 திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
இதில் பிரேசல் நாட்டை சேர்ந்த திருநங்கைக்கு பிரபஞ்ச அழகி பட்டம் கிடைத்தது. ரன்னர் அப் என்று கூறப்படும் 2வது இடத்துக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில், திருச்சி ரியானாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது .