Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதனை திருச்சி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

0

வாடிக்கையாளர்களிடம் நகை சேமிப்பு திட்ட மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ப்ரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜை டிசம்பர் 18-ம் தேதி வரை திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட TANPID நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ப்ரணவ் ஜுவல்லரி என்ற பெயரில் நகை கடைகள் தொடங்கி மாதாந்திர நகை சேமிப்பு சீட்டு திட்டம் நடத்தப்பட்டது.

 

இந்நிலையில் தீபாவளியின் போது பணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு சீட்டு பணம் திரும்ப அளிக்காமல் திடீரென கடைகள் மூடப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இந்நிலையில் ப்ரணவ் ஜுவல்லரி நகை சேமிப்பு திட்டத்தில் மோசடி செய்ததாக கூறி மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பலர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் 100 கோடி அளவிற்கு வாடிக்கையாளர்களிடம் மோசடி நடைபெற்றதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் இந்த வழக்கானது பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.

இந்நிலையில் ப்ரணவ் ஜுவல்லரி உரிமையாளர்களான மதன் செல்வராஜ், இவரது மனைவி கார்த்திகா மதன் ஆகியோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு வழக்குப்பதிவு செய்து லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடிவந்தனர். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மதுரை மாவட்ட முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ப்ரணவ் ஜுவல்லர்ஸ் உரிமையாளரான மதன் செல்வராஜ் நேரில் சரண்டரானார். இதனைத் தொடர்ந்து அவரை டிசம்பர் 21-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி ஜோதி அவர்கள் உத்தரவிட்ட நிலையில் மதுரை மத்திய சிறையில் மதன் செல்வராஜ் அடைக்கப்பட்டார்.

 

இந்நிலையில் ப்ரணவ் ஜுவல்லர்ஸ் உரிமையாளரான மதன் செல்வராஜை 10 நாட்கள் போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் மதுரை மாவட்ட முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது இன்று நீதிபதி ஜோதி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வரும் 18-ம் தேதி வரை மதன் செல்வராஜை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து மதன் செல்வராஜை திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ் தலைமையிலான காவல்துறையினர் விசாரணைக்காக பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். இதனிடையே வாடிக்கையாளர்களிடம் நகை சேமிப்புதிட்ட மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ப்ரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜின் மனைவியான கார்த்திகா மதன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிரமாக தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.