மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பெரிதும் அவதியுற்றனர். இப்போதுதான் சில இடங்களில் படிப்படியாக மழைநீர் வடிந்துவருகிறது. இந்த சூழலில் வேளச்சேரி பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட அத்தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹசன் மவுலானா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், ”இயற்கை பேரிடர் நடக்கும்போது இதெல்லாம் சர்வசாதாரணமான விஷயம்.
இதனை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வேளச்சேரி ஏரியின் உயரம் அதிகரிக்கும்போது ஊருக்குள் தண்ணீர் வரத்தான் செய்யும். அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நிவாரண பணிகளை பொறுத்தவரை அதிகபட்சமாக இதுதான் பண்ண முடியும்.
தண்ணீர் கடலுக்கு செல்ல வேண்டும். கடல் உள்வாங்கலைனா நாம என்ன பண்ண முடியும். இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது” என அலட்சியமாக பதிலளித்தார். மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும்போது இது சர்வசாதாரணம் என்பது போலவும், இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்றும் அலட்சியமாக பேசிய எம்எல்ஏ.,வின் கருத்து சர்ச்சையாகியுள்ளது.