திருச்சியில் வெறிநாய்க்கடியினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு. இலவச தடுப்பூசி போட்டுக்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தல்.
திருச்சி மாவட்டத்தில் வெறிநாய் கடியினால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிா்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்கடி மற்றும் வெறிநோய்க்கான தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.
வெறிநோய் 100 சதவீதம் தடுக்க கூடிய ஒன்றாகும். எனவே, பொதுமக்கள் தெரு நாயோ அல்லது வீட்டு செல்லப்பிராணியோ கடித்தாலோ, நக்கினாலோ உடனடியாக கடிப்பட்ட இடத்தை முழுமையாக சோப்பு மற்றும் அதிகப்படியான தண்ணீரை கொண்டு 15 நிமிஷங்கள் கழுவ வேண்டும். உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நான்கு தவணைகள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்றி தங்களை ரேபிஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.