திருச்சி அருணாச்சலம் மன்ற காங்கிரஸ் அலுவலகத்திற்கு பூட்டு. திருநாவுக்கரசு படத்தை செருப்பால் அடித்த காங்கிரசார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக திகழும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசரை காங்கிரஸ் கட்சியினரே கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்தியிருப்பதுடன் அவரது உருவப்படத்தை செருப்பால் அடித்து, உதைத்து ஆத்திரத்தை தீர்த்துக்கொண்ட நிகழ்வு திருச்சியில் அரங்கேறியுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு கோஷ்டிப்பூசல் ஒன்றும் புதிதல்ல என்று கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தான் கே.எஸ்.அழகிரி ரொம்ப பெருமையாக சொல்லியிருந்தார். அதற்குள் திருச்சியில் களேபரம் நடந்துள்ளது.
திருநாவுக்கரசருக்கு எதிரான போராட்டம் பற்றி திருச்சி மாவட்ட துணை தலைவர் சிக்கல் சண்முகம் கூறுகையில்:-
திருச்சி மாநகர் மாவட்ட கட்சிப் பதவி நியமனம் தான் போராட்டத்திற்க்கு காரணம் அதாவது திருச்சி மாநகர் மவட்ட காங்கிரஸ் தலைவராக ஜவஹர் இருந்து வந்த நிலையில், ரெக்ஸை அந்தப் பதவிக்கு திருநாவுக்கரசு புதிதாக நியமித்தார். தனது ஆதரவாளருக்காக ஜவஹரிடமிருந்து பதவியை பறிக்க வைத்தார்.

திருநாவுக்கரசருக்கு எதிராகவும், ரெக்ஸ்க்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பிய காங்கிரஸார், அருணாச்சல மன்றம் முன்பாக திருநாவுக்கரசர் உருவப்படத்தை செருப்பால் அடித்து உதைத்து தங்கள் கோபத்தை கொட்டித் தீர்த்தனர்.
பின்னர் சிக்கல் சண்முகம் தலைமையிலான காங்கிரசார் அருணாச்சலம் மன்றத்தை இழுத்து முடினர்.
இதனிடையே திருநாவுக்கரசர் தொண்டர்களை மதிப்பதே கிடையாது என்றும் அதே போல் கட்சியின் சீனியர்களையும் மதிப்பதில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் திருச்சியில் மீண்டும் போட்டியிட நினைத்த நிலையில் இந்த சம்பவம் மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் சிக்கல் சண்முகம் தலைமையில் நடைபெற்றது மாவட்டத் துணைத் தலைவர் புத்தூர் சார்லஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மலைக்கோட்டை கோட்டத் தலைவர் ரவி பொன்மலை கோட்ட தலைவர் செல்வகுமார் முன்னாள் கோட்டத் மாவட்ட தலைவர்கள் கள்ளத்தெரு குமார் ஓவியர் கஸ்பர் பீம நகர் காசிம் சேவா தல மாநில செயலாளர் அப்துல் குத்தூஸ் இளைஞர் காங்கிரஸ் கவுஸ் ஹரிஹரன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கிரேசி அமிர்தவல்லி ஜெகதீஸ்வரி கலைச்செல்வி அண்ணா சிலை விக்டர் தேவதானம் செந்தமிழ் செல்வன் டெல்லி சரவணன் சிறுபான்மை பிரிவு தலைவர் சுபேர் ஆனந்த் மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
அண்மையில் திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதிக்கு மக்கள் குறைகளை கேட்கச் சென்ற திருநாவுக்கரசரிடம், உங்களை பார்க்க 20 முறைக்கு மேல் உங்கள் அலுவலகம் வந்தும் நீங்கள் இல்லை என்றும் பிறகு எதற்கு உங்களுக்கு ஓட்டுப்போட்டோம் எனவும் இளைஞர் ஒருவர் சரமாரியாக கேள்வி எழுப்பி திருநாவுக்கரசரை திணற வைத்த நிகழ்வு அரங்கேறியது. இப்போது என்னவென்றால் சொந்தக்கட்சியினரே இப்படி போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை கிளப்பியுள்ளனர்.