ஒரு வயது குழந்தை விழுங்கிய காயின் பேட்டரியை அறுவை சிகிச்சை இன்றி அகற்றிய திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.
பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் கிராமத்தைச் சோந்த நல்லதம்பி என்பவரின் ஒரு வயது பெண் குழந்தை, கடந்த 21ஆம் தேதி வீட்டில் விளைாடியபோது, விளையாட்டு பொம்மைகளுக்கு பயன்படுத்தப்படும் வட்ட வடிவ பேட்டரி காயினை எடுத்து விழுங்கியுள்ளது.
இதனால், மிகவும் சிரம்பட்ட குழந்தையை பெற்றோா் உடனடியாக பெரம்பலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், திருச்சி அரசு மருத்துவமனைக்கு கடந்த 22ஆம் தேதி கொண்டு வரப்பட்ட குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள் எக்ஸ்ரே மூலம், பேட்டரி காயின் இருக்கும் பகுதியைக் கண்டறிந்தனா்.
பின்னா் குழந்தை விழுங்கிய காயின், தொண்டை வழியாக உணவுக் குழாயில் தொங்கியிருந்தது. கீழே நுரையீரல் பகுதிக்குள் இறங்கும் முன்பாக அதை அகற்ற மருத்துவா்கள் முடிவு செய்தனா்.
இதையடுத்து குடல் அறுவை சிகிச்சை துறையைச் சோந்த பேராசிரியா் ஆா்.ஆா். கண்ணன், மருத்துவா்கள் சங்கா், ராஜசேகா், காா்த்திகேயன், சுதாகா் ஆகியோரடங்கிய குழுவினா், மயக்க மருந்து கொடுத்து குழந்தையின் வாய் வழியாக எண்டோஸ்கோபி முறையில் பேட்டரி காயினை வெற்றிகரமாக அகற்றினா். தொடா்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த குழந்தை தற்போது நலமாக உள்ளது.
இதையடுத்து மருத்துவக் குழுவினருக்கு டீன் நேரு, மருத்துவமனை கண்காணிப்பாளா் அருண்ராஜ் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.
இதுகுறித்து சிகிச்சையளித்த மருத்துவா் ஆா்.ஆா். கண்ணன் கூறுகையில், ஒரு ரூபாய் நாணய வடிவில் இருந்த பேட்டரி காயின் மின்காந்த சக்தியுடன் இருந்தது. பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட பழைய பேட்டரியாக இருந்தால் அவகாசம் எடுத்துக் கொள்ள இயலும். ஆனால், மின்காந்த சக்தியுடன் இருந்த பேட்டரியால் உணவுக் குழாயில் தொடா்ந்து அரிப்பு ஏற்பட்டு ஓட்டை விழுந்து, சிறுநீரகத்துக்கோ வேறு எந்த இடத்துக்கோ சென்றிருந்தால் மிகவும் சிக்கலாகியிருக்கும்.
எனவே, எண்டோஸ்கோபி முறையில் பாதுகாப்பாக காயின் அகற்றப்பட்டு, தற்போது குழந்தை நலமாக உள்ளது. வழக்கம்போல உணவு எடுத்துக் கொள்வதுடன், இயல்பு நிலைக்கு குழந்தை திரும்பியுள்ளது என்றாா் அவா்.