லால்குடி அருகே உள்ள நடராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி அன்னாள் ஜெய மேரி என்கின்ற பாப்பி (வயது 52). இவர் புள்ளம்பாடி அருகே உள்ள ஆலம்பாக்கம் கிராமத்தில் உள்ள புனித தோமையார் ஆர்.சி.தொடக்கப் பள்ளியில் 1999 ஆம் ஆண்டு முதல் இந்த நாள் வரை இடைநிலை ஆசிரியைராக 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் இந்த பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு பாடம் எடுத்து வந்துள்ளார். தற்பொழுது மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மேலும் மாணவர்களுக்கு “எமிஸ் டெஸ்ட்’ எனப்படும் ஆன்லைன் தேர்வானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் புள்ளம்பாடி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் தொலைத்தொடர்பு துறையில் இன்டர்நெட் வசதி சரியாக கிடைக்காத காரணத்தால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இந்த எமிஸ்ட் டெஸ்ட் நடத்துவதற்கு இயலாமல் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்த நிலையில் ஆசிரியை அன்னாள் ஜெயமேரி மாணவர்களுக்கு எமிஸ் டெஸ்ட் ஆன்லைன் தேர்வு நேற்றைய தினம் நடத்தியுள்ளார். அதில் இன்டர்நெட் சரியாக கிடைக்காத்தால் நாட் அசஸ்மென்ட் என்று தகவல் கிடைத்த காரணத்தால் உடனடியாக பள்ளியில் சக ஆசிரியர்களிடம் இது குறித்து அன்னாள் ஜெயமேரி கலந்துரையாடல் செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று மயங்கி கீழே விழுந்து வகுப்பறையிலேயே உயிரிழந்தார்.
22 ஆண்டுகளாக ஆசிரியாராக பணிபுரிந்து வந்த மேரி வகுப்பறையில் மாணவர்கள் கண் முன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.