Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தனித்தனியாக வரவேற்பு அளித்த திமுக, காங்கிரஸார்.

0

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படக்கூடிய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு, தினந்தோறும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இத்தகைய சிறப்புமிக்க ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக, ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்பது அப்பகுதி மக்கள் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் பகுதி மக்களின், 40 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று, ‘இன்று முதல் (16ம் தேதி) சோதனை முயற்சி அடிப்படையில், ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் மற்றும் திருச்சி மாவட்டம் கல்லக்குடி ரயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல’ தென்னக ரயில்வே ஒப்புதல் அளித்தது. அதன்படி, இன்று ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கு வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மீது பூக்களை தூவிய திமுக- காங்கிரஸ் தொண்டர்கள், பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

‘ஸ்ரீரங்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்வது பெரும் மகிழ்ச்சியாக இருப்பதாக’ கருத்து தெரிவித்த பயணிகள், ‘வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சோதனை முறையில் அல்லாமல் நிரந்தரமாகவே ஸ்ரீரங்கத்தில் நின்று செல்ல வேண்டும். இதுபோன்று அனைத்து ரயில்களும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர். திமுக- காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை வரவேற்க ஒன்றாக வந்திருந்தாலும், திமுகவினர் தனியாகவும், காங்கிசார் தனியாகவும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வரவேற்பு அளித்தனர்.

ஒருபுறம் திமுகவினர் லட்டுகளை வழங்கி, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்க என்றும், மறுபுறம் காங்கிரசார் பூக்களை தூவி, சோனியா வாழ்க, ராகுல் காந்தி வாழ்க, ரயிலை நிறுத்த உதவிய எம்பி திருநாவுக்கரசர் வாழ்க என்று தனித்தனியே கோஷம் எழுப்பினர். இதை பார்த்த ரயில் பயணிகள், தனித்தனியாக வரவேற்பு அளிக்கும் இவர்கள் ஒரே கூட்டணியில் தான் இருக்கிறார்களா? என நகைத்தவாறு சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.