காவிரில் மூழ்கி கல்லூரி
மாணவர் உயிரிழப்பு.
திருச்சி பாலக்கரை கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 19). அவர் காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமையை யொட்டி, நண்பர்களுடன் காவிரியில் குளிக்கச் சென்றார். ஓயாமரி மயானம் எதிரேயுள்ள படித்துறைப் பகுதியில் குளித்தபோது, எதிர்பாராத விதமாக அவர் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளார். திரும்பி மேடான பகுதிக்கு வருவதற்குள் திடீரென ஆற்றுநீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளார். உடனிருந்த நண்பர்கள் இருவரும் கரைக்கு வந்து தகவல் அளித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் நிகழ்விடத்துக்குச் சென்று மாணவரை தேடினர். பின்னர் சிறிது தொலைவில் அவரது உடல் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கல்லூரி மாணவர் நீரில் மூழ்கிய சம்பவம் பாலக்கரை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.