ஆடி 18 யை முன்னிட்டு திருச்சியில் உள்ளூர் விடுமுறை அளிக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் கலெக்டருக்கு கடிதம்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளரும்,திருச்சி மாவட்ட செயலாளருமான சே.நீலகண்டன் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களின் விவசாய தேவைகளுக்கும் 25 மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கும் பிரதான ஆதாரமாக விளங்குவது காவிரி ஆறு.
இந்த காவிரி ஆற்றை தங்கள் தாயாக எண்ணி கரையோரம் வசிக்கின்ற மக்கள் வழிபடுவது ஆடிப்பெருக்கு எனப்படும் ஆடி 18. எதிர்வரும் ஆகஸ்டு 3 ஆம் தேதி வியாழக்கிழமை ஆடி 18 ஆம் நாளாக கொண்டாடப்படுகிறது. திருச்சி மாவட்டமானது காவிரிக் கரையோரம் அமைந்துள்ளதால் மக்கள் மிகச்சிறப்பாக குடும்பத்துடன் ஒன்று கூடி இறைவனை வழிபட்டு இவ்விழாவைக் கொண்டாடுவர்.
இத்தகைய சிறப்புமிக்க ஆடிப்பெருக்கு தினத்தன்று கொரோனா உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படவில்லை. எனவே நடப்பாண்டாவது ஆகஸ்டு 3 ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மக்கள் மகிழ்வுடன் கொண்டாட உதவும் படியும், அதற்கு ஈடு செய்யும் விதமாக ஏதேனும் ஒரு நாள் வேலை நாளாக அறிவித்து விடுமுறை அளிக்கும் படி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சி மாவட்டக் கிளையின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.