அண்ணாமலை பாதயாத்திரையை வரவேற்று, திருச்சி சி.எஸ்.ஐ., பிஷப் படத்துடன் ஒட்டப்பட்டுள்ள ‘போஸ்டர்’ பின்னணியில், அமைச்சர் கே.என்.நேரு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில், ராமேஸ்வரத்தில் இன்று(ஜூலை 28) பாதயாத்திரையை துவக்குகிறார்.
அதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கொடி அசைத்து துவக்கி வைக்கிறார். பின், ராமேஸ்வரத்தில் நடக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், அமித்ஷா, அண்ணாமலை உள்ளிட்டோர் பேசுகின்றனர். அண்ணாமலையின் பாதயாத்திரையையொட்டி, திருச்சி மாவட்ட பா.ஜ., சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதில், பா.ஜ., சிறுபான்மையினர் அணி துணைத் தலைவர் பாட்ஷா மற்றும் திருச்சி சி.எஸ்.ஐ., பிஷப் சந்திரசேகரன் ஆகியோர் படங்களுடன், ‘2026ம் ஆண்டின் முதல்வர்’ என்ற வாசகத்துடன் வரவேற்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
‘தமிழகத்தின் நலனுக்காக நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை’ என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் திருச்சியில் தி.மு.க., ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற நேரத்தில் அண்ணாமலைக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட, இந்த போஸ்டர் விவகாரம், அக்கட்சியினிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: திருச்சிக்கு ஸ்டாலின் வரும் நேரத்தில், அண்ணாமலைக்கு ஆதரவாக, சி.எஸ்.ஐ., பிஷப் பெயரில் போஸ்டர் ஒட்ட, முன்கூட்டியே திட்டமிட்டுள்ளனர். பாதயாத்திரை துவக்குவதற்கு முன், முஸ்லிம் நிர்வாகிகளும், கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகிகளும் வரவேற்றது, சமூக நல்லிணக்கத்தை காட்டியுள்ளது.இதுவே அண்ணாமலைக்கு கிடைத்த முதல் வெற்றி. அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவிக்கும் போஸ்டரை, பா.ஜ., சிறுபான்மையினர் அணி நிர்வாகிகள், சி.எஸ்.ஐ., பிஷப்பை சந்தித்து வழங்கியுள்ளனர்.
தி.மு.க., மூத்த அமைச்சர் கே.என்.நேருவும் சி.எஸ்.ஐ., பிஷப்பும் நெருங்கிய நண்பர்கள். எனவே, இந்த போஸ்டர் பின்னணியில், அமைச்சரும் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
பாதயாத்திரையில் பங்கேற்க,கூட்டணி கட்சி தலைவர்களுக்கு, பா.ஜ., சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் பிரதான கட்சியான அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் பழனிசாமிக்கும், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஆனால், அவர் பாத யாத்திரையில் கலந்து கொள்ள மாட்டார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.இது குறித்து, அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது: பழனிசாமிக்கு தற்போது கால் வலி உள்ளது.
எனவே, சேலத்தில்ஓய்வெடுத்து வருகிறார். அங்கு நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்கிறார். சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். நீண்ட துார பயணம் வேண்டாம் என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அண்ணாமலை பாத யாத்திரையில், பழனிசாமி பங்கேற்க வாய்ப்பு குறைவு. அவர் சார்பில் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.