ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் விற்காவிட்டல் அதிரடி மாற்றம்.திருச்சி ஜெ.ஆர். நடவடிக்கையால் பணியாளர்கள் கலக்கம்.
திருச்சி மாவட்டத்தில் பொது விநியோக திட்டப் பொருள்கள் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மற்றும் சிந்தாமணி, அமராவதி கூட்டுறவு பண்டகசாலைகள் உள்ளிட்டவை மூலம் விநியோகிக்கப்படுகின்றன.
இதில் அமராவதி கூட்டுறவு பண்டகசாலைக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, கோதுமை, சா்க்கரை விநியோகங்களில் பிரச்னை இல்லை.
ஆனால், மளிகைப்பொருள்கள், சோப்பு, டீத்தூள் உள்ளிட்டவற்றை விற்க கடைக்கு தலா ரூ. 50 ஆயிரத்துக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாம்.
அந்தத் தொகைக்கு விற்காமல் குறைவாக ரூ. 10,000 அல்லது 15,000 என விற்ற ரேஷன் கடை ஊழியா்களை அமராவதி கூட்டுறவு பண்டகசாலை மண்டல நிர்வாக இயக்குனர் மற்றும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பணி உயர்வு பெற்ற திருச்சி மண்டல இணை பதிவாளர் இன இரண்டு பொறுப்பில் உள்ள ஹேமா சலோமி என்ற அதிகாரி மறு மாதமே அழைத்து வசைபாடி, வெகு தொலைவிலுள்ள ரேஷன் கடைகளுக்கு பணியிட மாற்றம் செய்து விடுகிறாராம்.
அதன்படி கடந்த மாதம் ரூ.50 ஆயிரத்துக்கு குறைவாக மளிகைப் பொருள்களை விற்ற துளசி என்ற பெண் ஊழியரை திருச்சி பாலக்கரையிலிருந்து துவாக்குடிக்கும், லட்சுமணன் என்பவரை தொட்டியத்திலிருந்து மணப்பாறைக்கும், ராஜாராம் என்பவரை உறையூரிலிருந்து தொட்டியத்துக்கும் என மொத்தம் 7 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனராம். இவா்களில் துளசி மாற்றுத்திறனாளி ,
லட்சுமணன் ஓய்வு பெற 6 மாதம் மட்டுமே உள்ளது.
ராஜாராம் குடலிறக்க நோயால் பாதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்யும் நிலையில் உள்ளவா் ஆவாா்.
இதனால் ரேஷன் கடை ஊழியா்கள் பலரும் கலக்கத்தில் உள்ளனா். ரேஷன் கடை மளிகைப் பொருள்களை கெஞ்சி, மன்றாடியே விற்க வேண்டியுள்ளது.மற்ற பொருட்களை பொதுமக்கள் வாங்க விரும்புவதில்லை. இதில் இலக்கு நிா்ணயித்தால் அந்த விற்பனை எப்படி சாத்தியமாகும் என்று புலம்புகின்றனர் பணியாளா்கள்.