Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மணப்பாறை ஐஸ் வியாபாரி கொலை நடந்து 18 மணி நேரத்தில் கொலையாளிகள் கைது.

0

 

மணப்பாறை அடுத்த கரும்புளிப்பட்டி சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). இவர் தனது சொந்த கிராமத்தில் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். இதனையடுத்து இவர் தனது மகன் மாரிமுத்து மற்றும் மூன்றாவது மனைவி சீரங்கம்மாளுடன் மணப்பாறை நோக்கி நேற்று காலை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது குளித்தலை சாலையில் ஆண்டவர் கோவில் கலிங்கப்பட்டி பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் வந்து, இடைமறித்த கும்பல் ஒன்று இவர்களை சரமாரியாக வெட்டத் தொடங்கியுள்ளது.

இதில் குப்புசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மாரிமுத்து கீழே விழுந்தார். இதனைக் கண்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், மாரிமுத்துவை மீட்டு மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை டிஎஸ்பி ராமநாதன் தலைமையிலான காவல்துறையினர், கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாரிமுத்துவிடம் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், குப்புசாமி என்பவரின் உறவினர் பெண் ஒருவரின் காதல் பிரச்சினையில் வந்த முன் விரோதம் என்றும், அதில் இடை மறித்து தாக்கிய நபர்கள் கரும்புளிபட்டியைச் சேர்ந்த தினேஷ், பாலாஜி, ஜீவா, மணி, சந்துரு, தேவா மற்றும் கரூர் மாவட்டம் தேவர்மலையைச் சேர்ந்த பிரவீன் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த குப்புசாமியின் உடல் நேற்று உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து டிஎஸ்பி தலைமையிலான தனிப்படையினர் கொலை செய்த நபர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். இதனையடுத்து கொலையாளிகள் மணப்பாறை அடுத்த மறவனூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து நள்ளிரவில் மறவனூர் பகுதியில் தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த கொலையாளிகளான தினேஷ், சந்துரு, மணி, தேவா, பிரவீன் உட்பட ஆறு பேரை நள்ளிரவில் அதிரடியாக கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலை நடந்த 18 மணி நேரத்தில் அதிரடியாக செயல்பட்டு கொலை குற்றவாளிகளை கைது செய்த மணப்பாறை காவல்துறையினரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.