தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை
எஸ்.சி.பட்டியலில் இருந்து வெளியேற்றக்கூடாது அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக மாநாட்டில் தீர்மானம்.
தேவேந்திரர் சமூக பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் நடத்திய பட்டியல் சமூக பாதுகாப்பு மாநாடு திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக நிறுவன தலைவர் வக்கீல் பொன். முருகேசன் தலைமை தாங்கி பேசினார். தேவேந்திரர் சமூக பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்
மு.ஊர்காவலன் முன்னிலை வகித்தார். இதில் மக்கள் தேசம் கட்சி தலைவர் ஆசைத்தம்பி, தமிழ் தேசிய முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் த.சு.கார்த்திகேயன், சமத்துவ இந்து மக்கள் கட்சி தலைவர் அல்லூர் சீனிவாசன்,தேசிய மருதம் மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் எம்.பி. செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;-

பள்ளர், பன்னாடி, காலாடி உள்ளிட்ட ஏழு உட்பிரிவை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்களை எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்றம் ( நீக்கம்) செய்யக்கூடாது ,
தேவேந்திரகுல வேளாளர் மக்களின் கல்வி, பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்த மக்களை தொடர்ந்து எஸ்.சி. பட்டியலில் நீட்டிக்க மத்திய, மாநில அரசால் நியமனம் செய்யப்பட்ட ஹன்ஸ்ராஜ் பர்மா குழு மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்ததை தொடர்ந்து அமலில் இருக்கச் செய்ய வேண்டும்.
எஸ். சி. பட்டியலில் இருந்து கொண்டு எஸ்.சி. பட்டியல் இழிவு அவமானம் என பொது மேடைகளிலும், ஊடகங்களிலும் பேசி வரும் தேவேந்திர வேளாளர் சமுதாய தலைவர்களையும் எஸ்.சி
பட்டியல் வெளியேற்ற ஆதரவாளர்களையும் தமிழக அரசும் தேர்தல் ஆணையமும் தனி தொகுதியில் போட்டியிட அனுமதிக்க கூடாது.
எஸ்.சி. தேவேந்திர குல வேளாளர் பட்டியலில் இருந்து கொண்டு
எஸ்.சி.பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர்களை நீக்கம் செய்ய வேண்டும் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசி சமூகத்தில் பின்தங்கியுள்ள எஸ்.சி. தேவேந்திர குல வேளாளர் மக்களின் வளர்ச்சியை தடுக்கும் அரசு ஊழியர்களை ஆய்வு செய்து அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.
எஸ் சி பட்டியலில் பெரும்பான்மை சமூகமாக பள்ளர் சமூகம் இருக்கின்ற காரணத்தால் 18 சதவீதம் என்ற எஸ்.சி பட்டியலை 30 சதவீதமாக உயர்த்தி அதில் 10% உள் இட ஒதுக்கீடு தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு வழங்க வேண்டும்.
தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களுக்கு தமிழக அமைச்சரவையில் முக்கிய 5 துறைகளை வழங்க வேண்டும். தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களுக்கும் பழைய சமூக மக்களுக்கும் அருந்ததியர் சமூக மக்களுக்கும் தமிழக ஆட்சி அதிகாரத்தில் துணை முதல்வர் பொறுப்பை வழங்க வேண்டும்.
55 சதவீத பட்டியல் சமூக மக்களை கொண்ட திருவரம்பூர் சட்டமன்ற தொகுதியை 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குள் தனி தொகுதியாக அறிவிக்க தமிழக அரசும் தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவேந்திர குல வேளாளர் சமூக கல்வி பொருளாதார முன்னேற்றத்திற்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். இமானுவேல் சேகர்னார் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்திட வேண்டும்.
பல ஆண்டுகளாக காலியாக உள்ள எஸ்சி எஸ்டி அரசு பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்கிட வேண்டும். சாதிவாரியாக கணக்கெடுப்பு சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 20 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
முடிவில் தேவேந்திர குல இளைஞர் பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் வக்கீல் கே.ஸ்ரீதர் நன்றி கூறினார்.