திருச்சி எடமலைப்பட்டி புதூர் செக்போஸ்ட் அருகே கல்லூரி மாணவனை வழிமறித்து தாக்கி, மொபட்டை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்கள் மூன்று பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி நாகமங்கலம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் லிங்கேஸ்வரன் ( வயது 19). திருச்சி கல்லூரியில் பி.ஏ. வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .நேற்று இவர் திருச்சி ரயில் நிலையத்தில் தனது சகோதரரை விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்தார்.
பின்னர் தனியாக இரு சக்கர வாகனத்தில் நாகமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கோரையாறு பாலம் அருகே எடமலைப்பட்டி புதூர் பழைய செக்போஸ்ட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மூன்று மர்ம நபர்கள் லிங்கேஸ்வரனை வழிமறித்தனர். அவரை தாக்கி இவர் வந்த இருசக்கர வாகனத்தை பறித்து விட்டு,தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து லிங்கேஸ்வரன் எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பேபிஉமா வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.
கல்லூரி மாணவரை வழிமறித்து தாக்கி மொட்டை பறித்துச் சென்ற சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.