இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் கவுகாத்தியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் இன்று பகல்-இரவு மோதலாக நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பெர்னாண்டோ 20 ரன்களும், நுவானிந்து பெர்னாண்டோ 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த குஷல் மெண்டிஸ் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார். அணியின் நம்பிக்கை நட்சத்திரமான கேப்டன் ஷானகா 4 ரன்களில் குல்தீப்பின் சுழலில் ஆட்டமிழந்து அவுட்டானார்.
இந்திய பந்துவீச்சாளர்களில் துல்லிய பந்துவீச்சில் இலங்கை வீரர்கள் அடுதடுத்து ஆட்டமிழந்தனர்.
இலங்கை இறுதியில் இலங்கை அணி 39.4 ஓவர்களில் 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் சிராஜ், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். ரோகித் 14 ரன்னிலும், கில் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த கோலி 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஐயர் 28 ரன்கள் எடுத்து அவுட்டாக, அடுத்து வந்த ராகுலும், ஹர்திக்கும் இணைந்து நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஹர்திக் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும் ராகுல் நிதானமாக விளையாடி அரைசதமடித்தார். 64 ரன்கள் எடுத்த அவர், கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். இறுதியில் இந்திய அணி 43.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஆட்டநாயகனாக ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்ட
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.