நமக்கு நாமே திட்டம்: திருச்சி மாநகராட்சி வளர்ச்சிப் பணிக்கு பொதுமக்கள் சார்பில் ரூ.20.67 லட்சம் நிதி
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சி வளர்ச்சித்
திட்டங்களுக்கு பொதுமக்கள் சார்பில் ரூ.20.67 லட்சம் நிதி .
திருச்சி மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் திட்டங்களை செயல்படுத்த, பொதுமக்கள் சார்பில் ரூ. 20.67 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சியில் “நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் தங்களது பகுதியில் திட்டங்களை செயல்படுத்த பொதுமக்கள் அல்லது அமைப்புகள் சார்பில் மூன்றில் ஒரு பங்கு திட்ட செலவுத்தொகையை அளித்தால், மீதி தொகையை மாநகராட்சி மூலம் செலவிட்டு திட்டங்களை நிறைவேற்ற முடியும்.
அந்த வகையில் திருச்சி மாநகராட்சி 49 ஆவது வார்டு, சங்கிலியாண்டபுரம் குமரன் தெருவில் வசித்து வரும் பொதுமக்கள் தங்களது பகுதியில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைப்பதற்கு மொத்த மதிப்பீடு ரூ.52 லட்சத்தில் பொதுமக்களின் பங்களிப்பாக மூன்றில் ஒரு பங்கு தொகையாக ரூ.17.33 லட்சமும், வார்டு எண்.5 திருவானைக்கா சுங்கச்சாவடி அருகிலுள்ள ரவுண்டானாவில் மாநகரை வரவேற்கும் பெயர் பலகை மற்றும் அலங்கார விளக்கு பொருத்தும் பணிக்கு மொத்த மதிப்பீடு ரூ.10 லட்சத்தில் மூன்றில் ஒரு பங்கு தொகையான ரூ.3.34 லட்சம் தொகையை, விசாலா ஏஜேன்சீஸ் டைல்ஸ் நிறுவனத்தின் சார்பிலும் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் இரா.வைத்திநாதனிடம், காசோலை மற்றும் வரைவோலையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் ஜி.குமரேசன், உதவி செயற்பொறியாளர் ஏ.லோகநாதன் மற்றும் இளநிலைப்பொறியார திவாகர், பாலருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுபோல மேலும் பல்வேறு பணிகளையும் அவரவர் பகுதிகளில் நிறைவேற்ற நமக்கு நாமே திட்டம் மூலம் மூன்றில் ஒரு பங்கு தொகையை செலுத்தி திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளலாம் என ஆணையர் தெரிவித்துள்ளார்.