திருச்சி அருகே
மூட்டை மூட்டையாக
ரேஷன் அரிசி பறிமுதல்.
தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் காவல்துறை இயக்குனர் அருண் உத்தரவுபடி அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று கண்காணித்த போது திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு மண்ணச்சநல்லூர் புலிவலம் அருகே உள்ள சிறுகுடி என்ற கிராமத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் படி திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா தலைமையில் திருச்சி சரக டிஎஸ்பி சுதர்சன்,திருச்சி ஆய்வாளர் கோபிநாத், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது சிறுகுடி கிராமத்தில் இருந்து புலிவலம் செல்லும் சாலையில் உள்ள சந்தேகத்திற்கு இடமான தனியாக இருந்த ஆஸ்பெட்ராஸ் கூரை போடப்பட்ட ஒரு கட்டிடத்தை சென்று பார்த்தபோது போலீசை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பி ஓடியவரை துரத்திப் பிடிக்க முயற்சித்த போது இரவு நேரம் என்பதால் அவர் தலைமறைவாகி விட்டார்.
உடனே திறந்து இருந்த கட்டிடத்தின் உள்ளே சென்று பார்த்தபோது சுமார் 50 கிலோ எடை கொண்ட 10 வெள்ளை நிற சாக்கு மூட்டைகளில் சுமார் 500 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசியும்,305 மூட்டைகளில் ரேஷன் அரிசியை உடைத்து குருணையாக வைத்திருந்த சுமார் 50 கிலோ எடை கொண்ட 15,250 கிலோ குருணை அரிசியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தப்பி ஓடிய நபரை பற்றி விசாரித்த போது திருச்சி தென்னூரை சேர்ந்த பாபு என்கிற சாதிக் பாட்ஷா எனவும் இங்கே கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் குருணை அரிசியை பாபு என்கிற சாதிக் பாட்ஷா என்பவர் தொடர்ந்து சில நாட்களாக ரேஷன் அரிசியை அரைத்து குருணையாக்கி நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு விற்பனை செய்வதாக தெரியவந்ததால் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் குருணையுடன் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய திருச்சியை சேர்ந்த பாபு என்கிற சாதிக் பாட்ஷாவை தேடி வருகின்றனர்.