Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகர முதல் பெண் காவல் ஆணையராக சத்யப்பிரியா பதவி ஏற்றுக் கொண்டார்.

0

'- Advertisement -

திருச்சி மாநகர முதல் பெண் காவல் ஆணையராக எம்.சத்தியபிரியா இன்று பொறுப்பேற்றார்.

திருச்சி மாவட்ட காவல் துறையிலிருந்து மாநகர பகுதிகளைப் பிரித்து, திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தை உருவாக்கும் வகையில் 01.06.1997 அன்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக, திருச்சி மாநகரத்தின் முதல் ஆணையராக ஐ.பி.எஸ் அதிகாரியான வடிவேலு கடந்த 08.06.97 அன்று பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்து கே.ராதாகிருஷ்ணன், விபாகர் சர்மா (2 முறை), ஜெ.கே. திரிபாதி, அசுதோஷ் சுக்லா, சி.வி.ராவ், எஸ்.ஜி. ராஜேந்திரன், ஏ. அலெக்ஸாண்டர் மோகன் (2 முறை), சுனில்குமார் சிங் (2 முறை), பிரதீப் வி.பிலிப், சங்கர் ஜிவால், அசோக்குமார்தாஸ், பிரமோத்குமார், கரன்சின்கா, கருணாசாகர், கே.வன்னியபெருமாள், மா.மாசானமுத்து, சைலேஷ்குமார் யாதவ், சஞ்சய் மாத்தூர், எம்.என். மஞ்சுநாதா, ஏ.அருண் (2 முறை), ஏ.அமல்ராஜ், வி.வரதராஜூ, ஜெ.லோகநாதன், க.கார்த்திகேயன் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் திருச்சி மாநகர காவல் ஆணையர்களாக பணியாற்றி வருகின்றனர்.

க.கார்த்திகேயன் காவல் ஆணையராகப் பொறுப்பேற்று 15 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், தற்போது அவர் மத்திய மண்டல ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, காஞ்சிபுரத்தில் டி.ஐ.ஜி-யாக பணியாற்றிய எம். சத்தியபிரியா ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டு இன்று (ஜனவரி 4) பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்மூலம், திருச்சி மாநகர காவல்துறை உருவாக்கப்பட்டு, செயல்பாட்டிலுள்ள கடந்த 25 ஆண்டுகளில் 32-வது திருச்சி மாநகர காவல் ஆணையராகப் பொறுப்பேற்ற சத்தியபிரியா மாநகரின் முதல் பெண் காவல் ஆணையர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

சத்யபிரியா கடந்த 1997-ம் ஆண்டு காவல் துறையில் வேலூர் டிஎஸ்பியாக பணிக்குச் சேர்ந்தார். கடந்த 2006-ம் ஆண்டு எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று சேலம் மற்றும் திருச்சி மாநகரங்களில் சட்டம், ஒழுங்கு துணை ஆணையர், நாமக்கல் மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்தார்.

அதன்பின் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று காவலர் பயிற்சிப் பள்ளி, காஞ்சிபுரம் சரகங்களில் பணிபுரிந்துள்ளார்.

இவர், கடந்த பிப்ரவரி 2012 ஜூலை முதல் 2013 வரை திருச்சி மாநகர காவல் துறையில் துணை ஆணையராக பணியாற்றியபோது மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், தெற்கு சூடான நாட்டுக்குச் சென்று, ஐ.நா பணிக் குழுவில் சேர்ந்து காவல் ஆலோசகராக ஓராண்டு பணியாற்றினார்.

2014-ல் மீண்டும் இங்கு பணியில் சேர வந்தபோது, ​​தமிழக காவல் துறையில் அனுமதி பெறாமல் தெற்கு சூடான் சென்றதாகக் கூறி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், மத்திய அரசு அதை ஏற்க மறுத்ததால், சத்தியபிரியா மீண்டும் தமிழக காவல்துறை பணியில் இணைக்கப்பட்டார்.

இவரது சிறந்த பணியைப் பாராட்டி 2020-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்ற பின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் திருச்சியில் கஞ்சா வேட்டை தொடரும்.பான்பரா குட்கா விற்பனை செய்யப்படுவதை ஒழிக்க பல புதிய யுக்திகளை பயன்படுத்துவோம்.

மேலும் திருச்சி மாநகரில் ரவுடிசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

பின் மாநகரில் உள்ள உயர் மட்ட காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.