பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில்
மாடு முட்டி சிறுவன் படுகாயம்.
திருச்சி, பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் சுற்றி திரியும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட விலங்குகளால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நேற்று மாலை மாடு முட்டியதில் சிறுவன் படுகாயம் அடைந்ததை தொடர்ந்து பெல் தொழிற்சங்கம் சார்பில், சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் மத்திய அரசின் பெல் பொதுத்துறை நிறுவனமும் அருகிலேயே குடியிருப்பும் அமைந்துள்ளது. குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை வளாகத்திற்குள் ஆடுகள், மாடுகள், நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன.
இதனால், நாய்கடிகள் மற்றும் மாடுகள் முட்டியதால் பலரும் பாதிப்புக்கு உள்ளானதால், தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் குறிப்பாக குழந்தைகள் அனைவரும் அச்சத்துடனேயே உள்ளனர். எனவே விலங்குகளை அப்புறப்படுத்துமாறு கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை பூலாங்குடியை சேர்ந்த பெல் ஊழியர் சுரேஷ்குமார் அவரது மகளை தனிப்பயிற்சி வகுப்பில் விடுவதற்காக, தனது 4 வயது மகன் ஜஸ்வந்த் மற்றும் மகளோடு பெல் காமராஜர் நகர் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது கீழே இறங்கிய சிறுவன் ஜஸ்வந்தை அப்பகுதியில் சுற்றித்திரிந்த மாடு முட்டித்தள்ளியது. இதில் சிறுவன் ஜஸ்வந்த் பலத்த காயமடைந்தான். உடனடியாக சிறுவனை மீட்டு பெல் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்த தகவல் பெல் நிறுவன தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தொழிற்சங்கத்தினர் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கோரி பெல் நிறுவன பயிற்சி மையம் (ட்ரெயினிங் சென்டர்) காமராஜர் சிலை அருகே சாலையில் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த திருவெறும்பூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையில் போலீஸார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, தொழிற்சங்கத்தினர் கூறுகையில், பெல் நிறுவன குடியிருப்பு பகுதிகள் கூத்தைப் பார் பேரூராட்சி, துவாக்குடி நகராட்சி மற்றும் நவம்பட்டு ஊராட்சி என மூன்று உள்ளாட்சி நிர்வாக பகுதிகளுக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது. புகார்களின் பேரில் துவாக்குடி நகராட்சி ஊழியர்களும், கூத்தைப்பார் பேரூராட்சி ஊழியர்களும் பெல் குடியிருப்பு வளாகத்தில் சுற்றி தெரியும் ஆடு, மாடு, நாய்களை பிடிக்க முயற்சிக்கும் போது, விலங்குகள் நல வாரியம் மூலம் அவற்றை பிடிக்க த டைவிதிக்கின்றனர். எனவே விலங்குகளை பிடிக்க உரிய அனுமதியை பெற்றுக் கொடுத்தால், விரைவில் பிடிக்கமுடியும் என தெரிவித்தனர்.