இ.சேவை மைய அனுமதி பெற்று தருவதாக பலரிடம் ரூ. 40 லட்சம் மோசடி.
திருச்சி பாலக்கரை மைக்கேல் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 27) பட்டதாரி இளைஞர். இவரிடம் திருச்சி பீரங்கி குளத்தெரு பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் அறிமுகமானார்.
அப்போது தான் பெங்களூரில் மத்திய அரசின் இ சேவை ஆணையத்தில் வேலை செய்வதாக தன்னை அறிமுகம் செய்தார். அப்போது ரூ. 40 ஆயிரம் கொடுத்தால் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான இ சேவை மைய ஐ.டி. கொடுப்பதாக கூறினார். இதன் மூலம் தினமும் ரூ. 800 சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய உதயகுமார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிக்காக பல்வேறு தவணைகளில் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்தார்.பின்னர் மேலும் 2 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்துள்ளார் அது மட்டும் அல்லாமல் நண்பர்கள் பலரிடம் இ- சேவை மைய அனுமதிக்காக ரூ.39 லட்சத்து 71 ஆயிரம் வசூல் செய்து அவரிடம் கொடுத்தார்.
ஆனால் அவர் ஐடி பெற்றுக் கொடுக்கவில்லை. இதையடுத்து ஏமாற்றம் அடைந்த உதயகுமார் திருச்சி மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.