Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கேளிக்கை விடுதிக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் கைது.சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் மீது ஒன்றுமில்லை….

0

திருச்சி புத்தூரில்
நடன கேளிக்கை விடுதிக்கு எதிர்ப்பு தெரிவித்து
பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம்;
போலீசாருடன் மோதல்- தள்ளுமுள்ளு பலர் காயம்.

ஸ்டாலினை விமர்சித்ததாக திமுகவினர் சாலை மறியல்.

திருச்சி புத்தூர் நான்கு ரோட்டில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் நடன கேளிக்கை விடுதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், அந்த அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும் திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க.வினர் இன்று புத்தூர் நான்கு ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று காலை மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் கட்சியினர் திரண்டனர் .

அப்போது அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பா.ஜ.க.விற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .ஒரு கட்டத்தில் அது தள்ளுமுள்ளாக மாறியது.

 

இதில் ராஜசேகரன்,கௌதம் நாகராஜன், ஆல்பர்ட் உள்ளிட்ட சில நிர்வாகிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.அப்போது போலீசார் கை செய்வோம் என கூறியதால் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்து வேனில் குண்டு கட்டாக ஏற்றி சென்றனர். இது தொடர்பாக பா.ஜ.க. மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் கூறும்போது,
திருச்சியில் பிரபலமான கல்லூரிக்கு அருகில் மன மகிழ் மன்றம் என்ற பெயரில் இதுபோன்ற நடன கேளிக்கை விடுதிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் மது விருந்து மற்றும் பெண்களின் நடனத்துக்கு அனுமதி அளிக்கிறார்கள். இதன் மூலம் கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ஒரு வழிப்பாதையாக இருக்கும் இந்த இடத்தில் எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.
கல்லூரியும் அதன் அருகாமையில் இருக்கின்றது. எனவே இதனை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் காளீஸ்வரன், ஒண்டி முத்து, மண்டல் தலைவர் பரஞ்சோதி, மாநில இளைஞரணி பொறுப்பாளர் கௌதம் நாகராஜன், மாவட்ட துணை தலைவர்கள் சந்துரு, நாகேந்திரன், சுபேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த சம்பவத்தில் 8 பெண்கள் உட்பட 52 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக கூறி திமுக வட்டச் செயலாளர் புத்தூர் பவுல்ராஜ் தலைமையில் திமுகவினர் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் கொடுத்தனர். பின்னர் அவர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனால் இவர்கள் மீது எந்த வழக்கும் பதியாமல் சமாதானமும் பேசி அனுப்பி வைத்தனர் போலீசார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மாலையில் பாஜகவினர் 9 பேரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனை அறிந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏராளமான பாஜகவினர் அங்கு குவிந்ததால் புத்தூர் பகுதியில் இன்று சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.