கிராமப்புற மாணவர்களை அரசு அதிகாரிகளாக உருவாக்கும் என்.ஆர் ஐ.ஏ.எஸ் விஜயாலயனுக்கு அமைச்சர் கே.என்.நேரு பாராட்டு.

கிராமப்புற மாணவர்களை
அரசு அதிகாரிகளாக உருவாக்கும் அரும்பணியை செய்கிறார் விஜயாலயன் அமைச்சர் கே.என். நேரு பாராட்டு.
திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் பயின்ற 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்.,
ஐ.ஆர்.எஸ், தேர்வுகளில் வெற்றி பெற்று பணியாற்றி வருகிறார்கள்.
சமீபத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு என்.ஆர்.ஐ. ஏ. எஸ். அகாடமி தலைவர் ஆர். விஜயாலயன் தலைமை தாங்கினார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குரூப் 1 தேர்வில் டி.எஸ்.பி. பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முசிறி எஸ். காயத்ரி, சி.சிந்து, கபிலன்,வேளாண்துறை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட அருண் ஜூலியஸ் ஆகியோருக்கு பரிசு வழங்கி பேசினார். அவர் கூறியதாவது;-
ஜெயங்கொண்டம் உடையார்பாளையத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து திருச்சியை நோக்கி வந்து அனைவரையும் அரசு அதிகாரிகள் ஆக்க வேண்டும் என தனது வாழ்நாளை அர்ப்பணித்து பணியாற்றிக் கொண்டு இருப்பவர் விஜயாலயன். இந்த கல்வி நிறுவனத்தின் படிப்படியான வளர்ச்சியை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.
சிந்தாமணியில் ஆரம்பிக்கப்பட்டு கே. கள்ளிக்குடிக்கு வந்து மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
சென்னையில் இருக்கக்கூடிய இதுபோன்ற அகாடமிகளுக்கு வசதி அதிகமாக இருக்கும். அதனால் அங்கு அவர்களை வெற்றி பெறச் செய்வது எளிது.
திருச்சியின் கிராமப்புறங்களில் இருப்பவர்களை கொண்டு வந்து அதிகாரிகளாக உருவாக்குவது கடினமானது. அந்த அரும்பணியை என் ஆர் ஐ ஏ எஸ் அகாடமி செய்து வருகிறது. இதையே அவர் சென்னையில் செய்திருந்தால் வசதி வாய்ப்புடன் கடன் இல்லாமல் இருந்திருக்கலாம்.
நான் முதன்முறையாக டெல்லிக்குச சென்றபோது லால்குடி பகுதியைச் சேர்ந்த மத்திய அரசு பணியில் இருந்த 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஊர் பாசத்தில் என்னை வந்து பார்த்தார்கள். நேரடியாக எஸ்.பி.பதவிக்கு செல்பவர்களை விட டிஎஸ்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நீங்கள் காவல் நிலையங்களில் பழகி நல்ல அனுபவத்துடன் ஐஜி. அந்தஸ்து வரைக்கும் வர முடியும்.
நாங்கள் முன்பு பார்த்த காவல்துறை வேறு இப்போது பார்க்கும் காவல்துறை வேறு. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் காவல் நிலையங்களில் திமு.க.வினருக்கு தான் மரியாதை இருக்கும்.
ஆனால் இன்றைக்கு அந்த நிலைமை இல்லை. அரசு என்ன சொல்கிறதோ அதனை அரசு பணியாளர்கள் செய்கிறார்கள். என் மீது 11 கொலை முயற்சி வழக்குகள், மோசடி வழக்கு, நில அபகரிப்பு வழக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு என போட்டார்கள். என்ன செய்ய முடியும் .அரசு சொல்வதை பணியாளர்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும்.

இப்போது டிஎஸ்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நீங்கள் நாணயமாக நியாயமாக இருந்தால் உங்கள் வாழ்க்கையில் குடும்பமும் குழந்தைகளும் நன்றாக இருக்கும்.
தமிழக அரசு நடத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை காட்டிலும் யுபிஎஸ்சி தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெற்றால் இந்திய அளவில் மிகப்பெரிய இடத்துக்கு வர முடியும். மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகள் 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நெய்வேலியில் 269 இன்ஜினியர்கள் பணிக்கு சேர்ந்திருக்கிறார்கள். அதில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை.
மத்திய அரசின் ஐஐடி கல்வி நிறுவனங்களில் 90 சதவீதம் பேர் பிராமண மாணவர்கள் தான் படிக்கிறார்கள். இங்கு மாநில அரசு ஒரு மருத்துவக் கல்லூரி மாணவனுக்கு ரூ.50 லட்சம் செலவழிக்கிறது என்றால், ஐஐடி மாணவன் ஒருவருக்கு மத்திய அரசு ஒரு கோடி வரை செலவழிக்கிறது. அந்த அளவுக்கு படிப்பை விரிவாக்கம் செய்திருக்கிறார்கள். சென்னை ஐஐடியில் பிற்படுத்தப்பட்ட ஆசிரியர் ஒருவரை உயர் ஜாதியினர் அடித்திருக்கிறார்கள்.
மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு பியூன் வேலை கூட தருவதில்லை.
கலைஞர் அவர்கள் என்னை இரண்டு முறை எம்பி யாக நிற்கச் சொன்னார்.ஆனால் நான் ஊரை விட்டு போக மாட்டேன் என்று சொன்னேன். ஆகவே தான் நான் இங்கே இருந்து கொண்டிருக்கிறேன்.
ஆகவே உங்கள் எண்ணங்களை விசாலப்படுத்துங்கள். என் ஆர் ஐ ஏ எஸ் அகாடமியில் படித்த அதிகாரிகள் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்பது எனது எண்ணம். நாங்களும் உங்களுக்கு பயனுள்ளவர்களாக இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன்
பழனியாண்டி ஒன்றிய செயலாளர் கருப்பையா ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம் மற்றும் திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் மாணவர் எம். மணிவண்ணன் நன்றி கூறினார்.

