Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் “என் குப்பை எனது பொறுப்பு’ விழிப்புணர்வு நிகழ்ச்சி.

0

 

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி சார்பில் இன்று காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின்படி

” என் குப்பை எனது பொறுப்பு” என் மாநகராட்சி, எனது சுகாதாரம், என் பெருமை” என்னும் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர், கலைக் காவிரி கல்லூரி உதவிப் பேராசிரியர் கி.சதீஷ் குமார் பங்கேற்றனர்.

உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு சிறப்புரையாற்றிய பேரா.சதீஷ் குமார் மாநகர விரிவாகிக் கொண்டே போகும் நகரமயமாதலுக்கு ஏற்ப மக்கள்தொகையும் கிராமங்களில் இருந்து நகரங்களில் குடியேறுவோர் அதிகரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் நுகர்வும் , நுகர்வுக்கேற்ப குப்பைகளும் மலைகள் போல் பெருகி உயர்ந்து வருவது பெரும் மேலாண்மை நெருக்கடியை உருவாக்கி வருகிறது.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவதை தடுக்க வேண்டும், அவ்வாறு பயன்பாடுகளை தவிர்க்க வேண்டும். மக்கள் போடும் குப்பைகளை அகற்றுவதற்காக மாநகராட்சி உருவாக்கப்படவில்லை. நாம் போடும் குப்பைக்கு நாமே பொறுப்பேற்க வேண்டும். வரைமுறையில்லா நெகிழிப் பயன்பாட்டால் கால்நடைகள், பாலூட்டிகள் பேருயிரான யானை முதல் சிற்றெறும்புகள் வரை பலியாகி வருவது இந்நூற்நாண்டின் மனிதர்களால் உருவான சாபக்கேடு. எனவே துணிப்பை பயன்பாடுகளை ஊக்கப்படுத்தி அதிகரித்து, இறைச்சி வாங்கும்போது பாத்திரங்கள் எடுத்துச்செல்லும் முறையை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

வீட்டின் சுகாதாரம், வாழிட சுகாதாரம், மாநகர சுகாதாரம் யாவிலும் கவனம் செலுத்தி சுகாதாரமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

முன்னதாக மாநகராட்சி சார்பாக வழங்கப்பட்ட “என் குப்பை எனது பொறுப்பு” உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றனர்.

இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பு நிர்வாகக்குழு .ஆர்.கே.ராஜா, உயர்நிலைப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் வினோதினி, ஆர்.சந்திராதேவி, நர்மதா, மகேஸ்வரி. மோட்சராணி, அருணா, ரீனா,ராணி விக்டோரியா, மரினா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை தனலெட்சுமி , உள்ளிட்ட இருபால் ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.

இறுதியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.