திருச்சியில் கள்ளக்காதல் விவகாரம்
இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில்
ஒருவர் குத்திக்கொலை.
திருச்சியில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர் கத்தியுடன் போலீஸில் சரணடைந்தார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் கக்கன் காலனியைச் சேர்ந்தவர் அசோகன் மகன் சதிஷ் என்கிற சக்திக்குமார் (வயது 34). வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.
அவருக்கு திருமணமாகி, அவரது மனைவி கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து பெற்று கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தனியே பிரிந்து சென்று விட்டாராம். அருகே உள்ள காந்திநகர், சுருளிகோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் முத்துப்பாண்டி (வயது 32). கார் ஓட்டுநர். திருமணமாகாதவர். இருவரும் நண்பர்கள்.
சக்திக்குமார் வீட்டருகே வசித்துவரும் பெண் ஒருவருக்கும் முத்துப்பாண்டிக்கும் தொடர்பு ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக தொடர்ந்து வந்துள்ளது. நாளடைவில் சக்திக்குமாருக்கும் இந்த விஷயம் தெரியவரவே, அவருக்கும் அந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக தொடர்ந்துள்ளது. நாளடைவில் இந்த விவரம் இருவருக்கும் தெரியவரவே, சக்திக்குமார் முத்துப்பாண்டியை இனி தனது வீட்டுப்பக்கம் (அருகில்தான் அந்த பெண் வீடு உள்ளது என்பதால்) வரக்கூடாது எனவும், மீறி வந்தால், கள்ளத்தொடர்பு வைத்துள்ள பெண்ணின் உறவினர்களிடம் கூறி விடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளார்.
ஆனால், முத்துப்பாண்டி தனது தொடர்பை விடவில்லையாம். நேற்று முன்தினம் (புதன் கிழமை) நள்ளிரவு மீண்டும் முத்துப்பாண்டி, அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதை அவரது வீட்டிலிருந்து கண்காணித்த சக்திக்குமார், முத்துப்பாண்டியை அழைத்து மீண்டும் மிரட்டினாராம். ஆனால், இனி வரமாட்டேன் எனவும், தயவு செய்து விஷயத்தை யாரிடமும் கூற வேண்டாம் எனவும் முத்துப்பாண்டி கூறி கெஞ்சியுள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லையாம். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் முத்துப்பாண்டி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக்திக்குமாரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சக்திக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், போலீசார் தன்னைத் தேடுவதையறிந்த முத்துப்பாண்டி தானாகவே திருவெறும்பூர் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். அவரை கைது செய்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.