திருச்சியில் ரூ.1.36 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் ஆக்கிரமிப்பு. திருச்சி கலெக்டரிடம் பரபரப்பு புகார்.
திருச்சியில் ரூ.1.36 கோடி கோவில் நிலம் ஆக்கிரமிப்பு
கலெக்டரிடம் இன்று பரபரப்பு புகார்.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சிவராசு தலைமையில் நடந்தது.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர் .
இதேபோல் திருச்சி பீமநகர் கொட்டகொள்ளை தெரு பொதுமக்கள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் ரவி முத்துராஜா தலைமையில் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பீமநகர் கொட்டகொள்ளை பகுதியில் நூறு வருடங்கள் பழமையான விநாயகர்,
மாரியம்மன், ஒண்டி கருப்பு மற்றும் பரிவார தெய்வங்களை கொண்ட கோவிலுக்கு சொந்தமான காரை ஓட்டு கட்டிடம் உள்ளது. இதனுடைய தற்காலிக சந்தை மதிப்பு ரூ.1.36 கோடி ஆகும். அந்த கட்டிடம் பல வருடங்களாக பூட்டப்பட்டு இருந்தது. தற்போது அந்தப் பழமையான கட்டிடத்தை சேதப்படுத்தி சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்துள்ளனர்.
எனவே, அதை தடுத்து நிறுத்தி, நூறாண்டு பழமையான கோவில் கட்டிடத்தை மீட்டு ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.