திருச்சி பெண் தபால் ஊழியரிடம் தாலிச்சங்கிலி பறிப்பு.
திருச்சி கே.சாத்தனூர் கவி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 28). இவர் கீழக்குறிச்சி கிராம தபால் அலுவலகத்தில் (ஜி.டி.எஸ்.) ஊழியராக பணியாற்றி வருகிறார்.
தினமும் மொபட்டில் சென்று சம்பந்தப்பட்டவர்களின் வீட்டு முகவரியை தேடி சென்று உரிய தபால்களை வினியோகிப்பது வழக்கம்.
அதன்படி, வழக்கம்போல் மாலையில் பணி முடிந்து தனது மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
இந்த நிலையில் பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து ஜி.கார்னர் செல்லும் பாதையில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் புவனேசுவரியை மோதுவது போல் வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
இதுபற்றி புவனேஸ்வரி பொன்மலை போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் திருவானந்தம் வழக்குப்பதிவு செய்து விசாரணை
மேற்கொண்டு வருகிறார்.
இப்பகுதியில் அடிக்கடி இதுபோன்ற வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.