தஞ்சாவூர் தேர் விபத்து எதிரொலி:
ஸ்ரீரங்கம் தேர்த்திருவிழாவில் 100 சதவீதம் கூடுதல் பாதுகாப்பு.
ஆய்வுக்குப் பின் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு பேட்டி.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவில் தேர்த் திருவிழா நாளை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு, தேரினையும், தேர் செல்லும் பாதை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சு. சிவராசு, மாநகர போலீஸ் கமிஷனர் க.கார்த்திகேயன இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் .
பின்னர் கலெக்டர் சிவராசு நிருபர்களிடம் கூறும்போது;-
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா நாளை நடைபெறுகிறது. இதையடுத்து தேர் செல்லும் வழி நெடுகிலும் உள்ள மின் வயர்கள் மற்றும் மரக்கிளைகள் ஏதேனும் இடையூறாக இருக்கின்றதா? என ஆய்வு செய்ய மின்வாரியம், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ,மாநகராட்சி, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மரக்கிளைகள் வெட்டப்பட்டுள்ளன. இருப்பினும் தஞ்சாவூரில் நடந்தது போன்று ஒரு சிறு அசம்பாவிதம் கூட நடக்கக்கூடாது என்ற அடிப்படையில் முன்னெச்சரிக்கையாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 100 சதவீதம் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
சீனாவில் 100 பேருக்கு இருந்த கொரோனா வைரஸ் தோற்று தற்போது இரண்டே கால் கோடியாக உயர்ந்திருக்கிறது.ஆகவே நான்காவது அலையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இப்போது யாரும் முக கவசம் அணிவது இல்லை. தயவு செய்து அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றார்.
இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கூறும்போது ,
ஸ்ரீரங்கம் தேர் திருவிழாவுக்கு இந்த வருடம் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பாக சாமி கும்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1000 போலீசார் தேர் திருவிழாவில் பாதுகாப்பு ஈடுபடுத்தப்படுவார்கள்.
கடந்த ஆண்டை விட 400 பேர் கூடுதலாக பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் எனக் கூறினார்.
ஆய்வின் போது இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் மாரிமுத்து, செல்வராஜ் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உடன் சென்றனர்.