திருச்சியில் நேற்றிரவு பலமுறை
மின்தடை. பொதுமக்கள் அவதி
திருச்சியில் (நேற்று) புதன்கிழமை இரவு பலமுறை மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.
தமிழகத்த்தில் கடந்த சில நாள்களாகவே அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகின்றது. பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டாலும் பொதுமக்களிடையே மின்தடை பிரச்னை அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு 8 மணியளவில் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து வந்த மின்சார விநியோகத்தில் மீண்டும் தடையேற்பட்டது.
புறநகர் பகுதிகளில் தடையான மின்சார விநியோகம் முற்றிலும் சீராகவேயில்லை எனக்கூறப்பட்டது. மாநகரப் பகுதிகளில் விட்டு விட்டு வந்த மின்சார விநியோகம் இரவு முற்றிலுமாக ரத்தானது.
நள்ளிரவு 12 மணிக்குப் பின்னரும் நிலைமை சீராகவில்லை. இதேநிலை தமிழகம் முழுவதும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தனது ட்விட்டர் (சுட்டுரை) பக்கத்தில் இதற்கு விளக்கமளித்ததாகவும் தகவல்கள் பரவியது. அதில் மத்திய தொகுப்பிலிருந்து வழங்கி வந்த சுமார் 750 மெகா வாட் மின்சாரம் தடைபட்டதால் இந்த மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் சீராக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. என்றாலும் இந்த மின்தடை பொதுமக்களிடையே கடும் அவதியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.