மூதாட்டியை ஏமாற்றி நூதன முறையில் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களுக்கு போலீசார் வலை.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பாபா நகரை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவருடைய மனைவி பூங்கொடி (வயது63). இவர் கடந்த 18-ந் தேதி வீட்டின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பூங்கொடியிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.
அந்த மர்மநபர்களில் ஒருவர் இப்படி பாதுகாப்பில்லாமல் தங்க சங்கிலியை போட்டு செல்லாதீர்கள் என்று கூறி ஒரு பர்சில் வைத்து தருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதை நம்பி பூங்கொடி தனது 6 பவுன் சங்கிலியை கழற்றி கொடுத்துள்ளார்.
அப்போது மற்றொரு நபர் பூங்கொடியின் கவனத்தை திசை திருப்பி உள்ளார். இதை பயன்படுத்தி பர்சில் கல்லையும், மண்ணையும் வைத்து கொடுத்து பூங்கொடியை ஏமாற்றிவிட்டு இருவரும் தங்க சங்கிலியுடன் தப்பிச்சென்று விட்டனர்.
பின்னர் பர்சை திறந்து பார்த்த பூங்கொடி அதில் கல்லும், மண்ணும் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவர் இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து
நூதன முறையில் 6 பவுன் சங்கிலியை மோசடி செய்து பறித்து சென்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.