ராமஜெயம் கொலை குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்பட வேண்டும்
மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை
தமிழகத்தையே அதிரவைத்த ஒரு குற்ற சம்பவம் நடந்து இன்றுடன் பத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் அந்த கொலை குற்றத்திற்கான கொலையாளிகள் பத்து ஆண்டுகள் கடந்தும் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது வேதனையிலும் வேதனை. அதுவும் இறந்தவர் சாதாரண நபர் அல்ல. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரின் உடன் பிறந்த சகோதரர். மேலும் இவ்வாறு தமிழகம் முழுவதும் பல வழக்குகள் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ளனர் என்பது கசப்பான உண்மையும் கூட.
மறைந்த தொழிலதிபர் ராமஜெயம் மறைவிற்கு முன்பு தொழிலதிபர் துரைராஜ் உள்ளிட்ட இரட்டை கொலை வழக்கில் சந்தேகப்படும் நபராக பரவலாக பேசப்பட்டது. ஆனால் உண்மையில் தொழிலதிபர் துரைராஜ் மற்றும் அவரது கார் டிரைவர் கொலை வழக்கு குற்றவாளிகள் மற்றுமொரு இரட்டை கொலைக்கு பிறகு தான் கைது செய்யப்பட்டார்கள் என்பது வேதனை வரலாறு. இவ்வாறு வாழும் பொழுதும் தான் செய்யாத குற்றத்திற்கு பழிசொல்லும், மறைந்த பிறகு கொலைக்கான உண்மையான காரணம் தெரியாமல் அவர், அவர்கள் கற்பனைக்கு காரணங்களை இட்டுகட்டி பரப்பப்படும் அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராமஜெயத்தை கொலை செய்த குற்றவாளிகளை விரைந்து கைது செய்யப்படவேண்டும்.
ராமஜெயம் கொலை நடந்து இன்றுடன் பத்தாண்டை கடந்து செல்லும் இன்றைய கசப்பான சூழலில் மேற்படி கொலை வழக்கை தீவிரமாக விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு இந்த படுபாதக செயலுக்கு காரணமானவர்களை விரைந்து கைது செய்து தண்டனை பெற்று தர மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தென் மேற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.
அதே போல தமிழகம் முழுவதும் தீவிர குற்ற செயல்கள் தொடர்பாக இதுவரை கைது செய்யபடாமல் உள்ள வழக்குகள் மீது தமிழக காவல்துறை டி.ஜி.பி. தனிகவனம் செலுத்த வேண்டும் என திருச்சி தென் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கிஷோர் குமார் தெரிவித்துள்ளார்.